
ராஜஸ்தானில் சொத்து பிரச்னையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. அங்குள்ள பார்மர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவ்லால்(35). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பஜ்ரங்(9), ராம்தேவ்(8) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
சிவ்லாலை வெளியூரில் வசிக்கும் அவரது இளைய சகோதரர் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி தனது சகோதரர் வீட்டில் இருக்கிறாரா என்று பார்க்கும்படி சிவ்லால் இளைய சகோதரர் கேட்டுக்கொண்டார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சிவ்லால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லை. மறுநாள் காலையில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள குளத்தில் நான்கு பேரும் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உறவினர்கள் முன்னிலையில், அவர்கள் நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர்.
சிவ்லால் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது. அக்கடிதத்தில் தங்களது தற்கொலைக்கு தனது இளைய சகோதரர், தாயார் உள்பட 3 பேர்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சொத்துப்பிரச்னையில் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து கவிதாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், ”சிவ்லால் சொந்தமாக பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பினார். இதற்காக பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிவ்லாலில் தாயாரும், இளைய சகோதரரும் அதற்கு சம்மதிக்காமல் இருந்தனர். இது தொடர்பாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது.
சம்பவம் நடந்த அன்று சிவ்லால் தாயார் அருகில் உள்ள ஊரில் வசிக்கும் தனது இளைய மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். சிவ்லால் தந்தை வெளியூரில் நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

அவர்கள் இம்முடிவை எடுப்பதற்கு முன்பு தங்களது இளைய மகனுக்கு கவிதா தனது தங்க நகைகளை கழற்றி அணிவித்துள்ளார். அதோடு கண்மை பூசி, துப்பட்டாவால் பெண் போல் வேடமணிவித்து கணவன் மனைவி இருவரும் கண்டு ரசித்துள்ளனர். அதன் பிறகுதான் மொபைல் போனை ஆப் செய்துவிட்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். இது குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.