• July 3, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம்.

கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்த நிகழ்வுகள் அரங்கேறின.

அமைச்சரவை கூட்டத்திலும் பாரதமாதா படம் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே கேரளா பல்கலைகழகத்தில் உள்ள செனட் ஹாலில் ஸ்ரீபத்மநாபா சேவாசமிதி சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி எமெர்ஜென்சி-யை எதிர்த்து போராடிய போராளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக 65,000 ரூபாய் சேவா சமிதி சார்பில் செலுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. பல்கலைகழக விதிப்படி மதம் சம்பந்தமான நிகழ்சிகளோ, சொற்பொழிவுகளோ செனட் அரங்கத்தில் நடத்தக்கூடாது என்பதால் பாரதமாதா படத்தை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் படத்தை அகற்ற மறுத்துவிட்டனர்.

எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு

இதைத்தொடர்ந்து அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கவர்னருக்கு போனில் தகவல் தெரிவித்தார் ரெஜிஸ்டார். அதுபற்றி கவலைப்படாமல் கவர்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, கவர்னர் மேடையில் இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக ரெஜிஸ்டார் அலுவலகத்தில் இருந்து இ மெயில் மூலம் கவர்னர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது கவர்னரை அவமதிக்கும் செயல் எனவும். வெளியில் இருந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக சட்டத்துக்கு புறம்பாக ரெஜிஸ்டார் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி துணை வேந்தர் விசாரணை நடத்தினார். ரெஜிஸ்டார் கூறியதால்தான் இ மெயில் அனுப்பியதாக பல்கலைகழக பி.ஆர்.ஓ தெரிவித்தார். மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்தான் நடத்தக்கூடாது என பல்கலைகழக விதியில் உள்ளது. அப்படியானால் பாரதமாதா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என ரெஜிஸ்டாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கேரளா பல்கலைகழக ரெஜிஸ்டார் அனில் குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டுக்கான உத்தரவை கேரளா பல்கலைகழக துணை வேந்தர் மோகன் குந்நும்மல் பிறப்பித்தார். சீனியர் ஜாயிண்ட் ரெஜிஸ்டார் ஹரிகுமார் பொறுப்பு ரெஜிஸ்டாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா பல்கலைகழக செனட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பாரதமாதா படத்துக்கு மலர்தூவி வணங்கினார்

கேரள மாநிலத்தில் ஒரு பல்கலை கழகத்தில் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதன் முறை. அதே சமயம், துணைவேந்தர் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சஸ்பெண்ட் செய்ததாக கூறி ரெஜிஸ்டார் அனில்குமார் இன்று கோர்ட்டை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னர் கூறியதால் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு கவர்னர் மாளிகை முன்பு பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்கு முயன்றபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் தண்ணீர் பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *