
கமல் ஹாசனின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசமான முயற்சி இருக்கும் என்கிற நம்பிக்கை திரை ரசிகர்களிடையே இருக்கிறது. அப்படி ஆழமான, காலம் கடந்தும் கொண்டாடப்படும் படைப்புகளை இயக்குநராகவும், நடிகராகவும் நம் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்திருக்கிறார் கமல் ஹாசன்.
அவருடைய தேடலும், பார்வையும், கனவுகளும் என்றும் உயரவே இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு புதிய கதைகளைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு பல முக்கியமான படைப்புகளைத் தந்திருக்கிறார். பல விஷயங்களிலும் முன்னோடி கலைஞனாக இருந்திருக்கிறார்.
பெருங்கனவோடு அவர் இயக்குவதாக, நடிப்பதாக இருந்த பல முக்கியமான படைப்புகள் பாதியில் நின்றுபோய் இருக்கிறது, படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டிருக்கிறது, படம்பிடிக்கப்பட்டு கைவிடப்பட்டிருக்கிறது. அந்தப் படங்களைப் பற்றிய விவரங்களையும், அவை என்னென்ன படைப்புகள் என்பதையும் பார்ப்போமா…
ராஜா என்னை மன்னித்துவிடு:
1982-ம் ஆண்டு, ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் கொடுத்த ருத்ரய்யா இயக்கத்தில் கமல் ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். கதைகள் முடிவாகி படத்திற்கு பூஜை போட்டு படத்தையும் தொடங்கிவிட்டார்.
படத்தின் படப்பிடிப்பு 15 நாள்கள் நடந்திருக்கிறது. அதன் பிறகு இப்படம் கைவிடப்பட்டிருக்கிறது. நக்சல் சிந்தனையோடு இருக்கும் கமல் ஹாசனுக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே நடப்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தத் திரைப்படத்தில் கமல் ஹாசனின் சகோதரரான சந்திரஹாசனே, படத்தில் அவரின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த ஒரு பாடலும் பின்பு மற்றொரு படத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

டாப் டக்கர்:
1981-ம் ஆண்டு பாரதிராஜா – கமல் ஹாசன் கூட்டணியில் ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்கு மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதற்கு முடிவு செய்து 1982-ம் ஆண்டு புதிய படத்தைத் தொடங்கினார்கள்.
அப்படத்திற்கு ‘டாப் டக்கர்’ எனவும் பெயரிட்டார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டப் பிறகு இத்திரைப்படம் ஏற்கெனவே அவர்களின் கூட்டணியில் வந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தைப் போலவே இருப்பதாக பாரதிராஜா கருதியிருக்கிறார். அதன் பிறகு இப்படத்தைக் கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் 1985-ல் இணைந்தது. அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம்.
அதிவீரபாண்டியன்:
1990-ல், கங்கை அமரன் இயக்கத்தில் கமல் ஹாசன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஜல்லிகட்டை மையப்படுத்திய கிராமத்து சினிமாவாக அது உருவாக இருந்தது. அதற்கான வேலைகள் அனைத்தையும் கங்கை அமரன் தொடங்கிவிட்டார். அதன் பிறகு இத்திரைப்படம் கைவிடப்பட்டது. இதேபோன்றதொரு கிராமம் சார்ந்த கதையை எழுதி, நடிக்க கமல் முடிவு செய்தார். அதுதான் இன்றும் கல்ட் சினிமாவாகக் கொண்டாடப்படும் ‘தேவர் மகன்’.
கண்டேன் சீதையை:
மலையாள இயக்குநர் பாலசந்திர மேனன் தன்னுடைய ‘அம்மயனே சத்யம்’ என்ற மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டு, படத்திற்கு ‘கண்டேன் சீதையை’ எனப் பெயரிட்டார்கள். மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யும் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டது.

லேடீஸ் ஒன்லி:
1994-ம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிங்கீதம் ஸ்ரீனிவாஸ் ராவ் இயக்கத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த ‘லேடீஸ் ஒன்லி’. நடிகைகள் சீமா பிஸ்வாஸ், ஷில்பா ஷிரோத்கர், ஹீரா ராஜகோபால் ஆகியோர்தான் இந்த ரீமேக்கின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பையெல்லாம் முடித்துவிட்டு ரிலீஸுக்குத் தயார் செய்தனர். அதன் பிறகு இத்திரைப்படம் வெளியாகவே இல்லை. தமிழ் வெர்ஷனில் நாகேஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், கமல் ஹாசன் இந்தியில் நடித்திருப்பார்.
மருதநாயகம்:
‘மருதநாயகம்’ திரைப்படம் கமல் ஹாசனின் கனவுத் திரைப்படம். முகமது யூசுஃப் கானின் வாழ்க்கைக் கதையை ‘மருதநாயகம்’ திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதற்கான எழுத்து வேலைகளை கவனித்தார் கமல் ஹாசன்.
இத்திரைப்படத்திற்கு அப்போது பெரும் பொருட்செலவு தேவைப்பட்டது. அதற்காக பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இணை தயாரிப்பாளராகச் சேர்த்து படத்தைத் தொடங்கினார் கமல். இப்படத்தின் பூஜை பிரமாண்டமான முறையில் 1997-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. குயின் எலிசபெத் இப்படத்தின் பூஜைக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த செய்தி பலரும் அறிந்ததுதான்.

பூஜைக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பையெல்லாம் தொடங்கிவிட்டனர். அதன் பிறகு சில காரணங்களால் பிரிட்டிஷ் தயாரிப்பு நிறுவனம் படத்தின் தயாரிப்பு பணியிலிருந்து விலகியது.
படம் உருவாகுவதற்கு பெரும் பட்ஜெட் தேவைப்பட்டது. பிறகு, அப்போது அதற்கான பட்ஜெட் கிடைக்காததால் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. கமலின் கனவு திரைப்படமான இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தொடர்ந்து பேட்டிகளில் பகிர்ந்து வந்தார் கமல். ஆனால், பிறகும் படத்தின் வேலைகள் தொடங்கப்படவில்லை. ‘தக் லைஃப்’ படத்திற்கான புரோமோஷன் வேளையிலும் இத்திரைப்படம் தொடங்குமா, இல்லையா என்பது அடுத்த வருடத்திற்குள் தெரியும் எனக் கமல் குறிப்பிட்டிருந்தார்.
அமரகாவியம்:
1990-களுக்குப் பிறகு கமல் ஒரு காதல் கதையைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அதுதான் இந்த ‘அமரகாவியம்’ திரைப்படம். இப்படத்திற்காக கமல் ஹாசன் அமெரிக்காவுக்குச் சென்று புதிய ஃபிலிம் மேக்கிங் தொழில்நுட்பம் குறித்துப் படித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா இயக்குவதாக இருந்தது. பிறகு, இப்படமும் கைவிடப்பட்டது.

மார்கண்டேயன்:
‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் குஞ்சுமோன், கமல் ஹாசனை கதாநாயகனாக வைத்து ‘மார்கண்டேயன்’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார். பிறகு, தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது.
லண்டனில் காமேஷ்வரன்:
‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வரும் காமேஷ்வரன் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃபாக இப்படத்தை எடுக்க கமல் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான கதை வேலைகளையும் அப்போது முடித்துவிட்டார். லண்டனுக்குச் செல்லும் காமேஷ்வரன் சந்திக்கும் விஷயங்களை வைத்து இப்படத்தின் கதையைத் தயார் செய்து வைத்திருந்தார் கமல். பிறகு, ‘ஹே ராம்’ பட வேலைகளில் கமல் களமிறங்கிவிட்டார்.
‘பம்மல் கே சம்மந்தம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலின் இந்தக் கதை இயக்குநர் மற்றும் நடிகர் மெளலியின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. தனக்கு பதிலாக மாதவனை கதாநாயகனாக வைத்து படத்தை எடுக்க கமல் பரிந்துரைத்திருக்கிறார். பிறகு, மாதவன் நடிப்பில் கமலின் இந்தக் கதை திரைப்படமாக உருவானது. அதுதான் 2003-ம் ஆண்டு வெளியான ‘நள தமயந்தி’ திரைப்படம்.

நரன்:
‘பம்மல் கே. சம்மந்தம்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் ‘நரன்’ திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தை அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து வேலைகளையெல்லாம் தொடங்கிவிட்டனர். பிறகு, பட்ஜெட் காரணங்களால் இப்படமும் தடைப்பட்டது. இதன் பிறகு கே.எஸ். ரவிக்குமார் – கமல் கூட்டணியில் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படம் வெளியானது.
ரோபோட்:
‘முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘நாயக்’ படத்தை முடித்துவிட்டு இயக்குநர் ஷங்கர் கமல் ஹாசனை வைத்து ‘ரோபோட்’ படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார். கமல் ஹாசனும், ப்ரீத்தி ஜிந்தாவும் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டு, போட்டோஷூட்டெல்லாம் செய்தார்கள்.
2200-ல் நடப்பதாக இந்த சயின்ஸ் பிக்ஷன் கதையை அமைத்திருந்தார் ஷங்கர். பிறகு, இத்திரைப்படமும் தடைப்பட்டது. இக்கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டுதான் ‘எந்திரன்’ படத்தை எடுத்தார் ஷங்கர்.

மர்மயோகி:
‘மருதநாயகம்’ படத்தைப் போலவே ‘மர்மயோகி’ திரைப்படமும் கமலின் கனவுப் படைப்புகளில் ஒன்று. ‘தசவதாரம்’ படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த திரைப்படமாக கமல் இதை அறிவித்திருந்தார். அதற்காக பெரிய தாடியை வளர்க்கத் தொடங்கினார் கமல்.
7-ம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இப்படத்தின் கதையை அமைத்திருந்தார்கள். இந்த பீரியட் திரைப்படத்திற்கு பெரும் பொருட்செலவு தேவைப்பட்டது. அதனால் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ப்ரமிட் சாய்மிரா தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்க இருந்தது. பிறகு, ப்ரமிட் சாய்மிரா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்களால் இப்படத்திலிருந்து அந்நிறுவனம் விலகியது. முதற்கட்டப் பணிகளை முடித்து, போட்டோஷூட்டெல்லாம் முடித்த பிறகு இத்திரைப்படமும் நின்று போனது.
கே.ஜி:
நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாக இந்த ‘கே.ஜி’ திரைப்படம் அப்போது அறிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் நடக்கும் த்ரில்லர் கதைக்களமாக இப்படத்தின் கதையை கமல் எழுதியிருந்தார். இப்படத்தை கதாநாயகியே இல்லாமல் எடுக்கப் போகிறோம், இது புதியதாக இருக்கும் என கமல் அப்போதே அறிவித்திருந்தார். பிறகு, இத்திரைப்படமும் தடைப்பட்டு நின்றுபோனது.

19 ஸ்டெப்ஸ்:
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் பீரியட் கதை ஒன்றை இயக்குநர் பரத் பாலா கமல் ஹாசனை வைத்து எடுக்க முடிவு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினார். படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அசின் அப்போது கமிட் செய்யப்பட்டார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு 20 நாள்களுக்கு முன் இப்படத்திலிருந்து கமல் விலகினார். 2016-ம் ஆண்டு இயக்குநர் பரத் பாலா இப்படம் வேறு நடிகர்களை வைத்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பிறகும் இந்த சினிமா உருவாகவில்லை.
வாமமார்கம்:
2014-ம் ஆண்டு, ‘வாமமார்கம்’ என்ற தலைப்பிலான ஒரு கதையைத் திரைப்படமாக உருவாக்க வேலைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தார். பிறகு, இத்திரைப்படத்தின் அடுத்தகட்டப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
பரமபதம்:
2015-ம் ஆண்டு, மெளலி – கமல் கூட்டணியில் ‘பரமபதம்’ திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. காமெடி கலந்த ஹைஸ்ட் த்ரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகவிருந்தது. கமல் – கிரேஸி மோகன் கூட்டணியின் காமெடி படங்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. இத்திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியர்களில் ஒருவராக கிரேஸி மோகன், பணிகளை மேற்கொண்டார். பிறகு, இப்படத்தின் அடுத்தக் கட்டப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

சபாஷ் நாயுடு:
‘தசாவதாரம்’ படத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படம்தான் இந்த ‘சபாஷ் நாயுடு’. மலையாள இயக்குநர் ராஜீவ் குமார் இயக்கத்தில், லைகா நிறுவனமும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர். ரம்யா கிருஷ்ணன், ப்ரம்மானந்தம் ஆகியோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகினர். 2016-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு லிமி எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றுபோனது. பிறகு, இயக்குநராக கமல் ஹாசனே களமிறங்கி படத்தை முன் நகர்த்தினார். பிறகு, படத்தின் படத்தொகுப்பாளரும் படத்திலிருந்து விலகினார்.
அதே ஆண்டு தனது வீட்டில் கமலுக்கு விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டது. திரைப்படம் தொடர்ந்து தாமதமாக படத்தின் மற்ற நடிகர்களும் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகினர். 2017-ம் ஆண்டு படத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தபோது கமல் ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான சந்திரஹாசன் காலமானார். மீண்டும், கமலின் அரசியல் வருகை உட்பட சில காரணங்களால் மீண்டும் இத்திரைப்படம் தாமதமானது. இப்போதும் இத்திரைப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

புதிய சினிமாக்களை கோலிவுட்டுக்கு கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் கமல் ஹாசன் பல படைப்புகளையும் கையில் எடுத்திருக்கிறார். நல்ல பீரியட் கதையைக் கொண்ட படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற கனவுடன் அடுத்தடுத்து பீரியட் கதைகளில் பணிகளை மேற்கொண்டார் கமல். ஆனால், பட்ஜெட் உள்பட பல காரணங்களால் அந்தப் பீரியட் படங்களெல்லாம் தடைப்பட்டது.
‘மருதநாயகம்’, ‘மர்மயோகி’ என கமல் அறிவித்த பீரியட் படங்களையெல்லாம் அவர் மீண்டும் கையில் எடுக்க வேண்டும் என்பதே இப்போதும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட படங்களைத் தாண்டி ‘அம்மா அப்பா விளையாட்டு’, ‘யாவரும் கேளிர்’, ‘கிருஷ்ணா லீலா’, ‘மூ’, ‘டூ திவானே ப்யார் கே’, ‘சமயம்’ என பல தமிழ், இந்தி, மலையாளப் படங்களில் கமல் நடிக்கவிருந்த சில திரைப்படங்களும் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டது. இதைத் தாண்டி, கமலின் கைவிடப்பட்டப் படங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை கமென்ட்டில் பதிவிடுங்கள்.