
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருளைக் கட்சியில் இருந்து நீக்குவதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 3) தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது எம்எல்ஏ அருளை நீக்கியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் தொடர்வார்.
ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்துத்தான் கொரடா அருளை நீக்க முடியும். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணைப்பொதுசெயலாளர் பொறுப்பையும் வழங்கி இருக்கிறேன். பாமகவை நான்தான் வளர்த்தேன். இந்த ஜனங்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன்.

என்னுடைய மனது வேதனைப்படும் அளவிற்குச் சில செய்திகள், சிலரின் செயல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து இந்தக்கட்சியை வழிநடத்துவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.