
சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருணகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளர்.
இவர், வைகோவின் பேச்சுகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். மேலும், தன் கருத்துகளை ஆணித்தரமாக தன் சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியும் வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் இந்து கடவுள்களை அவதூறு செய்து பதிவிட்டு வருவதாகவும், கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பரப்புகிறார் எனவும் ராஜா என்பவர் சங்கரன் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கெனவே காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அருணகிரி (ஜூலை 1) கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம், தன் சுயசிந்தனைக் கருத்துகளை சமூக வலைதளங்களில் எழுதியதற்காக அருணகிரி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினரும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.