
சிவகங்கை: ‘போலீஸ் விசாரணையில் அஜித்குமார் கொலையான சம்பவம் அரச பயங்கரவாதம்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 காவலர்களைக் கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இச்சம்பவம் ஆறாத் துயரம். காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது ஆறுதலைத் தருகிறது.