
கோவை: “எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் ஏமாற்ற முடியாது. முழு உண்மை வெளிவர வேண்டும்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார் (27) உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘லாக் அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்’ மக்களாட்சியா? அல்லது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? என கேள்வி எழுப்பியிருந்தார்.