
அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்நாடு’ நிகழ்ச்சி நடைபெற்றதைக் குறிப்பிட்டே திமுக நிர்வாகிகள் விழுப்புரத்தின் திமுக முகம் பொன்முடி என தெரிவித்து வருகின்றனர்.!
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பிரசார இயக்கத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக பொதுமக்களை சந்திப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் தொடக்க நிகழ்வாக மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என அனைவரும் செய்தியாளர்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து விளக்கமளித்தனர். அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் தலைமையிலேயே நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்ற போதும், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளர் எனும் அதிகாரமிக்க பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக செம்மண் அள்ளிய வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்காவிட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சியை பொன்முடி கவனித்துக் கொண்டே வந்திருந்தார். இதை திமுக-வின் தலைமையும் கவனித்துக் கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் தற்போது பொன்முடியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை சுட்டிக்காட்டி பொன்முடி பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விழுப்புரம் மாவட்டத்தின் திமுக முகமாக எப்போதும் பொன்முடி தான் இருப்பார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் பொன்முடிக்கு கட்சி ரீதியாக பெரிய பொறுப்பு கொடுக்கப்படவுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் பின்னடைவை பொன்முடி சந்தித்திருந்தாலும், தனது நெருங்கிய நண்பரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில், விரைவில் திமுகவில் உயர்மட்ட பொறுப்பிற்கு பொன்முடி செல்லவுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!