• July 2, 2025
  • NewsEditor
  • 0

சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுகவிலிருந்து 9 உறுப்பினர்களும், அதிமுகவிலிருந்து 12 உறுப்பினர்களும், மதிமுகவில் இருந்து 2 உறுப்பினர்களும், காங்கிரஸ், எஸ்டிபிஐ-யிலிருந்து தலா ஒரு உறுப்பினரும், சுயேட்சையாக 5 உறுப்பினர்கள் என மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மதிமுக காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி நடந்த நகர மன்ற சேர்மன் தேர்தலில் திமுக சார்பில் உமா மகேஸ்வரி அதிமுக சார்பில் முத்துலட்சுமி போட்டியிட்டனர். இந்த மறைமுக வாக்கெடுப்பில் இருவருமே தலா 15 வாக்குகளைப் பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மனாக உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உமா மகேஸ்வரி

தென்காசி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மனைவியான இவர் நகராட்சி பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து மக்கள் பணிகளை செய்யவில்லை… ஆளும் கட்சியினர்களை கூட மதிக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கட்சியின் மூத்த அமைச்சர்கள் தலையிட்டு பிரச்னை சுமுகமாக பேசி முடிக்கப்பட்டது. இருந்த போதும் மீண்டும் மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை, ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை, எந்த ஒரு பிரச்னையும் பற்றி பேசுவதற்கு சென்றாலும் அவர்களை பார்ப்பதில்லை, தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில்

சேர்மன் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் கமிஷனர் பொறுப்பு நாகராஜனிடம் மனு அளித்தது மட்டுமல்லாமல் அறிவாலயத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள்

இந்நிலையில் இன்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தீர்மானத்தின் போது பத்திரிகையாளர்களை வெளியில் அனுப்பிவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒரு கவுன்சிலர் தவிர்த்து 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி பறிபோனது.

நகராட்சி கூட்ட அரங்கம்

நகராட்சி கவுன்சிலர் ஒரு கூறுகையில், “சேர்மன் உமா மகேஸ்வரி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 பேர் கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளதால் அவர் சேர்மன் பதவியை இழந்துள்ளார். அடுத்த கட்டமாக இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதிய சேர்மன் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *