• July 2, 2025
  • NewsEditor
  • 0

தி.மு.க ராஜ்யசபா எம்.பி கல்யாணசுந்தரம், இவரது மகன் முத்துசெல்வம் தி.மு.க ஒன்றிய செயலாளர். இவர் சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள பம்பபடையூரில் ஹோலி டிராப் பேக்கேஜ்டு என்கிற குடிநீர் நிறுவனத்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய தரநிலைகள் பணியகம் (பி.எஸ்.ஐ) மதுரை கிளை அலுவலகத்திற்கு, ஹோலி டிராப் நிறுவனத்தில், போலி ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் குடிநீர் பாட்டில்களில் பயன்படுத்துவதாக புகார் சென்றுள்ளது.

குடிநீர் நிறுவனம்

இதன் பேரில், இந்திய தரநிலைகள் பணியகத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவர் தயானந்த் தலைமையிலான குழுவினர் கடந்த ஜூன் 25ம் தேதி, முத்துசெல்வத்திற்கு, சொந்தமானது என சொல்லப்படும் ஹோலி டிராப் குடிநீர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா, வின்வே என வெவ்வேறு பிராண்ட் பெயர்களில், போலி ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொள்ளளவு கொண்ட 17,534 குடிநீர் பாட்டில்கள் மற்றும் போலி ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட சுமார் 3.8 லட்சம் லேபிள்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அப்போது பி.எஸ்.ஐ அதிகாரிகள் கூறியதாவது, “ஆய்வில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்ய இருக்கிறோம். விசாரணை முடிந்த பிறகு, இந்திய தரநிலைகள் சட்டத்தின் கீழ், குற்றவியல் புகார் அளித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

குடிநீர் நிறுவனத்தில் சோதனை செய்த அதிகாரிகள்

தி.மு.க எம்பியின் மகன் முத்துசெல்வம் நடத்துவதாக சொல்லப்படும் குடிநீர் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையிட்டது கும்பகோணம் பகுதியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் குடிநீர் நிறுவனத்தின் மேனேஜராக இருந்தவர், `லீஸ்க்கு எடுத்து நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதற்கும் முத்துசெல்வத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை’ என கூறி வருகிறார். மேலும், கம்பெனி முகப்பில் வைத்திருந்த வேலைக்கு ஆட்கள் தேவை போர்டையும் எடுத்து விட்டனர்.

இந்த நிலையில், கும்பகோணம் சப்– கலெக்டர் அலுவலகத்தில், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான பாரதிமோகன் தலைமையில், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் அறிவழகன், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் ஆகியோர் மனு அளித்தனர். பின்னர் அதிமுகவினர் கூறியதாவது, “குடிநீர் நிறுவனத்தில், போலி ஐ.எஸ்.ஐ முத்திரை பதிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டும் இதுவரை அந்த கம்பெனி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் நிறுவனம்

தரமற்ற குடி தண்ணீரை விற்பனை செய்து, பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், நிறுவனத்தை நடத்தி வரும் தி.மு.க ராஜ்யசபா எம்.பியும், மாவட்ட செயலாளருமான கல்யாண சுந்தரம், அவரின் மகன் தி.மு.க ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, ஹோலி ட்ராப் குடிநீர் நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *