
சிவகங்கை: சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்குவாத பிரச்சினைக்காக போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இருவரையும் காவல் நிலையத்திலேயே போலீஸார் கொடூரமாகத் தாக்கினர். சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்தது. தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலதரப்பிலும் கடும்கண்டன குரல்கள் எழுந்தன. இதனால் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.