
சென்னை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்தள பாதை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தாத்தாதேசிகர் திருவம்சத்தார் சபை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆகம விதிகளுக்கு முரணாக, கோயிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கோயிலின் கருவறைக்கும், வெளி பிரகாரத்துக்கும் இடையில் நடைமேம்பாலம், கருவறை செல்லும் புனிதமான ஆறு படிகளுக்கு பதில் சாய்தளம் அமைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இவை, அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் உள்ளது,” என மனுவில் கூறப்பட்டிருந்தது.