• July 1, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு 5 போலீஸார் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்புவனம் லாக்கப் டெத் – ஸ்டாலின்

இவ்வாறிருக்க அஜித்குமார் உயிரிழந்த நான்காம் நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரின் தாயைத் தொடர்புகொண்டு, “ரொம்ப சாரிமா… தைரியமா இருங்க. சீரியஸாக நடவடிக்கை சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்துகொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் பார்த்துக்கொள்வார்” என்று ஆறுதல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-யிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்!

கொலை செய்தது உங்கள் அரசு. “SORRY” என்பது தான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால்தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, “தைரியமாக இருங்கள்” என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?

எடப்பாடி பழனிசாமி - அதிமுக
எடப்பாடி பழனிசாமி – அதிமுக

முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?

“என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்” என்று சொல்கிறீர்களே… போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின்போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதைப் போன்ற முயற்சிதானே இதுவும்?

அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து, கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.

உங்கள் ஆசைவார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

“நடக்கக் கூடாதது நடந்துடுச்சு” என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா?

இது 25-வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *