
‘அடுத்த முதலமைச்சர் யார்?’
– இந்தக் கேள்வி தான், தற்போது கர்நாடகாவில் மையம் கொண்டுள்ளது.
‘இதில் என்ன பிரமாதம் அங்கே தேர்தலாக நடக்கவிருக்கலாம்!’ என்று கடந்துவிடாதீர்கள். கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் 2023-ம் ஆண்டு மே மாதம் தான் நடந்து முடிந்தது. மீண்டும் அடுத்த தேர்தல் 2028-ம் ஆண்டு தான் நடக்கும். கடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, பெருவாரியாக வெற்றி பெற்றது காங்கிரஸ்.
இரண்டு காரணங்கள்
காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றார்கள். ஆனால், அப்போது இருந்தே, ‘டி.கே சிவக்குமார் தான் தேர்தல் வெற்றிக்கு காரணம். அதனால், அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும்’ என்ற குரல் கர்நாடகாவில் எழுந்துகொண்டே இருந்தது.
இந்த நிலையில் தான், தற்போது மேற்கூறிய கேள்வி பலமாக எழத் தொடங்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை நேற்று முதல் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். இன்னொன்று, சித்தராமையா கர்நாடகா முதலமைச்சராக பொறுப்பேற்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆக, சுர்ஜேவாலா சந்திப்பு, அடுத்த முதலமைச்சருக்கான தேர்வாகத் தான் இருக்கும் என்று பரவலாக கணிக்கப்படுகிறது. மேலும், 2023-ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் போது, இரண்டாவது பாதி ஆட்சி பொறுப்பு டி.கே சிவக்குமாருக்கு வழங்கப்படும் என்று மேலிடம் உறுதி கொடுத்ததாக பேச்சு அடிப்பட்டது.
டி.கே சிவக்குமார் பின்னால் 100 எம்.எல்.ஏக்கள்!
இதற்கு வலு சேர்ப்பது போல, டி.கே சிவக்குமார் ஆதாரவாளரான கர்நாடகா எம்.எல்.ஏ இக்பால் ஹூசைன் தற்போது, ‘டி.கே சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்று அவர் பின்னால் 100 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். (கர்நாடகாவில் மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 138). அவரால் தான் நல்ல அரசாங்கத்தை வழங்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஒருவேளை, டி.கே சிவக்குமாரை இப்போது முதலமைச்சர் ஆக்கவில்லை என்றால், 2028-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது’ என்று பேசினார்.
இது நிலைமையை மேலும் கேள்விக்குரியதாக்கியது. இதுகுறித்து கேட்கப்பட்ட போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ‘மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை நாங்கள் மதிப்போம்’ என்று நேற்று பதிலளித்திருந்தார்.
மேலிடம் பார்த்துக்கொள்ளும்
மல்லிகார்ஜுன் கார்கேவின் இந்தப் பேச்சு, ‘அவர் தானே காங்கிரஸ் தலைவர். அவருக்கு மேலிடம் யார்… அப்போது அவர் தலைவர் பதவியில் வலுவாக இல்லையா?’ என்கிற கேள்வியை எழுப்பியது. மேலும், அவர் முதலமைச்சர் போட்டி எதுவும் இல்லை என்றும் உறுதியாக மறுக்கவில்லை.
இதை வைத்து பார்க்கும்போது, கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது போல தெரிந்தது.
இந்த நிலையில், நேற்று மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ‘ஐந்து ஆண்டுகளுக்கும் கட்சி பாறைப் போல இருக்கும்’ என்று பேசினார். அப்போது டி.கே சிவக்குமாரும் சித்தராமையாவின் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுந்து வருவதால் தான், கட்சி மேலிடம் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தது.

சித்தராமையாவிற்கு தனி பவர்
டி.கே சிவக்குமார் முதலமைச்சர் பதவியை விட, மாநில தலைவர் பதவியையே அதிகம் விரும்புகிறார். அவருக்கு அந்தப் பதவியில் தான் தொடர வேண்டும் என்பது ஆசை.
ஆனால், அவருக்கு இருக்கும் ஒரே ஒரு கண்டிஷன், அமைச்சரவையில் மாற்றம் கூடாது.
இதில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் சித்தராமையா. அவர் அமைச்சரவை மாற்றம் செய்வதன் மூலம், மேலும் தனது செல்வாக்கை அதிகரித்து கொள்ள முடியும் என்று நினைக்கிறார்.
சித்தராமையா நினைப்பதில், அவரது செல்வாக்கு விஷயம் மிகவும் சரியானது. கர்நாடகாவில் சித்தராமையா பெயருக்கே தனி பவர் உள்ளது.
எம்.எல்.ஏக்கள் இடையே எழுந்துள்ள குரலை பேச்சுவார்த்தை மூலம் தணிப்பது தான் சுர்ஜேவாலாவிற்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்கிறார்கள். மீண்டும் இந்தக் குரல்கள் எழாமல் இருக்க, சித்தராமையா தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களை திருப்தி படுத்த அடுத்து எதாவது செய்யப்படும்.
அதையும் மீறி எழுந்தால் ஒருவேளை முதலமைச்சர் மாற்றம் இருக்கலாம். ஆனால், நிச்சயம் இன்னும் சில மாதங்களுக்கு அது இருக்காது” என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.