
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் 6 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்துத் தாக்கியிருக்கின்றனர்.
நகை காணாமல் போனதாக முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாமல், காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்காமல் கோயிலுக்கு பின்புறத்திலேயே அஜித்குமாரை போலீஸார் கடுமையாகத் தாக்கவே, அவர் மரணமடைந்தார்.
இச்சம்பவம் மாநில அளவில் பெரிதாக வெடிக்கவே நீதிமன்றம் இதை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் அதிமுக வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை மதுரை உயர் நீதிமன்ற கிளை நேற்று விசாரித்தது.
ஆனால், அதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட தனிப்படை போலீஸார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மறுபக்கம், இவ்வழக்கை உயர் நீதிமன்ற கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனிப்படை போலீஸார் மீது ஏன் வழக்கு கூட பதிவுசெய்யாமல் சஸ்பெண்ட் செய்தனர், ஏன் கைதுசெய்யவில்லை என அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த வேளையில், “நகையைத் திருடியதாக அஜித்குமார் ஒப்புக்கொண்டார், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது அஜித்குமார் கீழே விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்” என எஃப்.ஐ.ஆரில் காவல்துறை தெரிவித்தது.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 5 பேர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர்.

உடற்கூராய்வு சோதனையில் அஜித்குமார் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகச் சொல்லப்படும் வேளையில், எப்.ஐ.ஆரில் வலிப்பு வந்து இறந்ததாகக் குறிப்பிட்டிருப்பது முரணாக இருக்கும் சூழலில், அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, “இது கொடூரமான மிருகத்தனம். முழு தமிழக காவல்துறையும் மறு பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
அஜித்குமாரின் கொடூரமான கொலையில் தொடர்புடைய அனைவரும் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.