
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். இவர் தன்னுடைய பற்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து டாக்டர் மணிகண்டனிடம் கூறியிருக்கிறார். உடனே டாக்டர் மணிகண்டன், அந்த மாணவியின் பற்களை பரிசோதித்திருக்கிறார். அப்போது மாணவியிடம் பேசிக் கொண்டிருந்த டாக்டர் மணிகண்டன், திடீரென அநாகரீமாக நடந்தாகத் தெரிகிறது.
டாக்டரின் இந்த செயல், மாணவிக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. உடனே சார், எனக்கு பற்களில்தான் பிரச்னை, என்று மாணவி கோபத்துடன் கூறியிருக்கிறார். அதற்கு டாக்டர் மணிகண்டன், பற்களில் உள்ள நரம்புகளின் பாதிப்பு குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டாமா என கூறியபடி தொடர்ந்து மாணவியிடம் அநாகரீகமாக நடந்திருக்கிறார்.
அதனால் சிகிச்சை என்ற பெயரில் டாக்டர், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதை உணர்ந்த மாணவி, `சார் எனக்கு ட்ரிட்மெண்ட் வேண்டாம். நான் வீட்டுக்குச் செல்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அதற்கு டாக்டர் மணிகண்டன், `உங்கள் பற்களில் உள்ள பிரச்னைகளை முழுமையாக தெரிந்தபிறகே சிகிச்சை அளிக்க முடியும். அதற்குள் அவசரப்படாதீங்க’ என மாணவியை சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் டாக்டரின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாத மாணவி, டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கிளினிக்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறியிருக்கிறார். பின்னர் கிளினிக்கில் நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க மாணவி கூறியிருக்கிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர், டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
பின்னர் மாணவி தரப்பில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். அப்போது டாக்டர் மணிகண்டன், `தான் சிகிச்சைதான் அளித்தேன். மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கவில்லை’ எனத் தெரிவித்தார். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மாணவி சிகிச்சைக்கு செல்லும் காட்சியும் அவசர அவசரமாக கிளினிக்கை விட்டு வெளியில் வரும் காட்சியும் பதிவாகியிருந்தது. அதை டாக்டர் மணிகண்டனிடம் காண்பித்த போலீஸார், மீண்டும் தங்கள் ஸ்டைலில் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு டாக்டர் மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸார் கூறுகையில், “சென்னையைச் சேர்ந்த மாணவி, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். சம்பவத்தன்று மாணவிக்கு பல் வலி என்பதால் டாக்டர் மணிகண்டனை சந்தித்து சிகிச்சை பெற்றியிருக்கிறார். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.