
இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் – நடிகை பிந்து மாதவி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்கு ராஜா. காமெடி கலாட்டா படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் எழில், நடிகர் விமல், `விஜய் டிவி’ புகழ், ரவி மரியா, லொள்ளுசபா சுவாமிநாதன், சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளத்துடன் தேசிங்கு ராஜா-2 உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி,“காமெடி படம் எடுப்பது 10 மனைவியை சமாளிப்பது போல. எல்லா நடிகர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும் என முயன்றுகொண்டே இருப்பார்கள். சீன் முடியவே முடியாது. இதைச் சிறப்பாக சமாளித்து தொடர்ந்து காமெடி படங்களை இயக்குகிறார் எழில். வித்யாசாகர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, இலக்கிய கவிஞரும் கூட. அவர் பாடலில் எந்த வேற்றுமொழி சொற்களும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இப்போதெல்லாம் சாதாரண வார்த்தைகளையே பாடலாக மாற்றி விடுகிறார்கள். கவிதையை நேசிக்கும் தன்மை இருக்கும் வித்யாசாகர் மாறுவதற்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.
இளையராஜாவுக்குப் பிறகு இசையை அதிகம் நேசிக்கக்கூடிய இசையமைப்பாளர் வித்யாசாகர். திருவிளையாடல் படத்தில் தருமி காமெடி போல `வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் 6 மணி காமெடி இருக்கும். என்னுடைய ஸ்டெரெஸ் பஸ்டர் காமெடி அது.
நம்மை பார்த்து படம் எடுப்பதை நிறுத்துங்கள் எனச் சொன்னால் நமக்கு எப்படி கோபம் வருமோ அப்படி யூ-டியூபர்களுக்கு விமர்சனம் செய்யாதீர்கள் என்றால் கோபம் வரும். விமர்சனம் செய்யுங்கள். ஆனால், அதில் நடித்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசாதீர்கள் என்பது மட்டுமே எங்கள் வேண்டுகோள்.” என்றார்.
இயக்குநர் ஆர்.பி உதயகுமார், “நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எனது. எனக்குக் கீழ்தான் எல்லோரும் இந்தப் படத்தில் இயங்குவார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளரின் மகன் ஜனா பார்ப்பதற்கு ராணா மாதிரி இருக்கிறார். புகழ் மிகவும் அழகான நடிகர். பெண்ணாகவே பிறந்திருந்தால் இன்னும் கலக்கியிருப்பார். நடிகர் விஜயகாந்துக்கு அடுத்து வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர் விமல்தான். நடிப்பதே தெரியாமல் யதார்த்தமாக நடிக்கும் நடிகர் விமல். வித்யாசாகர் சென்சிட்டிவான, எமோஷ்னலான இசையமைப்பாளர்.” என்றார்.