
திருப்பூரின் பரபரப்பான ஜவுளித் தொழிற்சாலையில், சூப்பர்வைசராக இருக்கிறார் சாந்தகுமார் (பிருத்விராஜ் ராமலிங்கம்). அவரது மோசமான ஒரு நாளில், பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், தொலைபேசியில் மனைவியின் வசைபாடுதல் ஆகியவை மன அழுத்ததுக்குக் கொண்டு செல்ல, தனது அறையில் தனியாக மது அருந்துகிறார். அதன்பின்பு போதையினால் ஏற்பட்ட விளைவால், வீட்டு உரிமையாளரிடம் சண்டை, முன்னாள் காதலிக்கு தொலைபேசியில் அழைப்பு என அடுக்கடுக்காக அலப்பறைகளைக் கூட்டுகிறார் சாந்தகுமார். இதன்பின்னர், அந்த ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள், அவர் வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது என்பதை பேசுவதே ‘குட் டே’ படத்தின் கதை.
மிகை நடிப்புக்கு வாய்ப்புகள் இருக்கும் குடிகாரர் பாத்திரத்தில், தள்ளாடும் காட்சிகளில் அளவான நடிப்பு, தனது வாழ்க்கையின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் உணர்வுபூர்வமான நடிப்பு என, கதையின் மையத்தை நகர்த்துகிறார் பிருத்விராஜ் ராமலிங்கம். ஆங்காங்கே அவர் போடும் ஒன்லைனர்கள் சிரிக்கவும் வைக்கின்றன. ஆடுகளம் முருகதாஸ், மைனா நந்தினி வரும் எபிசோட் கலகல. தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மற்றபடி, வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், காளி வெங்கட், ஆர்.கே.விஜய் முருகன், ஆகியோரும் குட்டி குட்டி கேமியோ இன்னிங்ஸ் ஆடிப் போகிறார்கள். அதில், போஸ் வெங்கட்டின் பகுதி மட்டும் ஓரளவுக்கு படத்தோடு பொருந்திப் போகிறது. மற்றவர்களின் பங்களிப்பு, நடிப்பில் குறையில்லை என்றாலும், படத்தின் யதார்த்த உணர்வை மேம்படுத்தவில்லை.
திருப்பூரின் இரவு நேரக் காட்சிகள், இயந்திரங்கள் சுழலும் ஆலை ஆகியவற்றை ஒருமுழுநீள படத்துக்கான தரத்தில் பதிவு செய்திருக்கிறது மதன் குணதேவாவின் ஒளிப்பதிவு. அதேபோல, இரவின் ஒலி உணர்வைப் பயன்படுத்தி, கதையின் மனநிலையைக் கடத்திய விதமும் சிறப்பு. அவரே படத்தொகுப்பாளராக இருக்க, இன்னும் கத்திரிக்கு அதிக வேலை கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதியின் நீளம் சோதிக்கிறது. ஒரு இலக்கற்ற பயணியின் கதைபோலச் செல்லும் திரைக்கதைக்கு, கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை அர்த்தம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக, உணர்ச்சிகரமான தருணங்களில் ஆழமான மெட்டுகள், கதையுடன் ஒன்றிணைந்து, பார்வையாளர்களை உணர்வு ரீதியாக இணைக்கின்றன. கார்த்திக் நேத்தாவின் வரிகளில் பாடல்கள், கதையின் சூழலுக்கு ஏற்ப, எளிமையாக அமைந்துள்ளன.

ஓர் இரவின் கலவரமும், அதனுள் மறைந்திருக்கும் மனிதத்தின் பயணமும் என்பதைப் பேசுகிறது போர்னா ஜேஎஸ் மைக்கேலின் திரைக்கதை. இயக்குநர் என்.அரவிந்தன் அதற்கு ஒளிவடிவம் கொடுத்திருக்கிறார். திருப்பூரின் பரபரப்பான சூழலை, அதன் இரவு நேர வாழ்க்கையுடன் இணைத்து, ஸ்டேஜிங் செய்வதில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மது போதையில் நடக்கும் காமெடி காட்சிகளை ஜாலியாக சித்தரித்திருந்தாலும் அதை ஓவர் ரொமாண்டிசைஸ் செய்யாமல், அதன் விளைவுகளை சீரியஸாக வெளிப்படுத்தியிருப்பது படத்தின் முக்கிய ப்ளஸ். இரவு முழுக்க எளிதில் கிடைக்கும் மது, பள்ளி சிறுவர்கள் பைக்குள்ளும் எளிதில் வருகிற பீர் பாட்டில்கள் என நிகழ்காலத்ததின் சமூக அவலத்தை சுட்டிக் காட்டியது சிறப்பு. முதல் பாதி முழுக்க ‘சாந்தகுமார்’ யார் என்பதை விவரிக்கவே சென்றுவிட, காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்கள் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்ற எதிர்பார்ப்புக்குக் கொண்டு செல்கிறது. நமக்கு நிகழ்கிற துயரங்களுக்கு ஆசுவாசமாகக் குடியைத் தேடிச் செல்கிறவர்களுக்கு அது மேலும் மேலும் சிக்கலையே தரும் என்கிற யதார்த்தத்தை சொல்ல நினைத்திருப்பது என படத்தின் பாசிட்டிவ் பக்கங்கள் இருக்கின்றன.
இருப்பினும், இடைவேளைக்குப் பின் ‘இது ஒரு பேட் நைட்’ என்ற பாணியில் மீண்டும் காட்சிகள் நோக்கமில்லாமல் பயணிப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது திரைக்கதையின் வேகத்தை மந்தப்படுத்தத் தொடங்குகிறது. அதேபோல ஆட்டோ ஓட்டுநராக காளி வெங்கட் வருகிற காட்சிகள், படத்தை விட்டு விலகிய உணர்வைத் தருகின்றன. இறுதியாக, விடியும் இரவை எப்படி ‘குட் டே’வாக மாற்றலாம் என்பதற்காக வைக்கப்பட்ட குழந்தை கடத்தல், நரபலி போன்ற விஷயங்கள், படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும்! என்ற உணர்வையே கொடுக்கின்றன. மது பழக்கத்தின் விளைவுகளை அர்த்தமுள்ள செய்தியாகச் சொல்ல முற்பட்டிருக்கும் படத்தில், திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டிருக்கலாம். குறிப்பாக, அந்தப் போராட்டக் காட்சிகள் எல்லாம் திரைக்கதையோடு ஒன்றாமல் துண்டாகத் தெரிகின்றன.

மொத்தத்தில் தரமான தொழில்நுட்பம், ஆங்காங்கே சிரிக்க வைக்கும் நகைச்சுவை, குடிக்கு எதிரான செய்தி ஆகியவற்றைக் கொடுத்திருக்கும் இந்த ‘குட் டே’, திரைக்கதையில் இன்னும் சற்று கவனத்தைக் கூட்டியிருந்தால், திரையனுபவத்தால் ‘இந்த நாளை மறக்க முடியாத நாளாக’ மாற்றியிருக்கும்.