• July 1, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச்  சேர்ந்த  நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் ‘எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ (Essential hypertension),  ‘நான்எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ (Non-essential hypertension), ‘வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்’ (White coat hypertension) என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது.

இதில் நீங்கள் குறிப்பிடுவது ‘வொயிட்கோட் ஹைப்பர் டென்ஷன்’ வகையில் வருவது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இயல்பாக BP அளவு நார்மலாகவே இருக்கும்.  ஆனால், கிளினிக் அல்லது ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது மட்டும் BP அளவு சற்று அதிகரித்துக் காணப்படும். அதற்காக அது ரொம்ப அதிகமாகவெல்லாம் போகாது. நார்மல் அளவைவிட சற்று அதிகரிக்கும், அவ்வளவுதான்.

உதாரணத்துக்கு, நார்மல் அளவில், இதயத்துடிப்பின்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிஸ்டாலிக் (Systolic pressure) பிரஷர் 120 என்றும், இதயத்துடிப்புக்கு இடையே ஏற்படும் டயஸ்டாலிக் (Diastolic blood pressure) பிரஷர் 80 என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணத்தில் மட்டும் 120 என்பது 130-140 என்ற அளவிலும், 80 என்ற அளவு 85-90 என்ற அளவிலும் அதிகரிக்கலாம்.

முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார்.

அதனால்தான் முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அந்த நோயாளிக்கு பிபி அதிகமாக இருக்கும்பட்சத்தில், முதலில் அவரது உடல்பருமனைப் பார்ப்போம். உடல் எடை அதிகமிருந்தால் அதைக் குறைக்க அறிவுறுத்துவோம்.

உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். கூடவே, ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்வியல் மாற்ற அறிவுரைகளைக் கொடுப்போம்.

முதல் விசிட்டிலேயே ஒரு நபரின் பிபி அளவு அதிகரித்துக் காணப்படுவதை வைத்து அதைக் குறைக்க எந்த மருத்துவரும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார். அதுவே, அந்த நபர், தலைச்சுற்றல், தலைவலி, முதுமை, இணை நோய்கள் என அறிகுறிகள் மற்றும் பிரச்னைகளுடன் வரும்போதும், பிபி அளவு 150-160க்கும் மேல் இருப்பது என்ற நிலையில் மட்டும் மருந்துகள் கொடுப்போம்.

BP

சம்பந்தப்பட்ட நோயாளிளை இரண்டு-மூன்று வாரங்கள் கழித்து வரச் சொல்வோம். அப்போதும் பிபி குறையாமல் அப்படியே இருந்தால் இரண்டு கைகள், இரண்டு கால்களில் செய்யப்படுகிற ‘ஃபோர் லிம்ப் பிளட் பிரஷர்’ (Four-limb blood pressure) அளவைப் பார்ப்போம். அதிலும் அசாதாரணம் தெரிந்தால், பிற ரத்தப் பரிசோதனைகள், கொலஸ்ட்ரால், கிரியாட்டினின் அளவுகளைப் பரிசோதிக்கச் சொல்வோம். அதற்கேற்பவே மருந்துகள் கொடுப்போம். அதுவும் வயதுக்கேற்ப வேறுபடும். எனவே, ‘வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்’ என்பது பரவலான பிரச்னையல்ல. பயப்பட வேண்டிய பிரச்னையும் அல்ல. மேற்குறிப்பிட்ட முறைகளில் அதை அணுகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *