
சார்க் என அழைக்கப்படும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கத்துக்கு ( SAARC – South Asian Association for Regional Cooperation) மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சினாவும் முயன்றுவருவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற இஸ்லாமாபாத் ஊடகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடந்த சந்திப்பில் இதுகுறித்து பேசப்பட்டதாக அந்த அறிக்கைக் கூறுகின்றது. இதில் வங்கதேசமும் கலந்துகொண்டுள்ளது.
இதில், கட்டமைக்கப்படும் புதிய சங்கத்தில் மற்ற தெற்காசிய நாடுகளையும் இணைப்பது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.
இதேபோல கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தான் – சீனா – பாகிஸ்தான் முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சார்க் கடந்த 1985ம் ஆண்டு டிசம்பர் 8ல் உருவான அமைப்பாகும். 7 உறுப்பினர்கள் இந்த அமைப்புக்கான சாசனத்தை ஏற்றுக் கையெழுத்திட்டு இணைந்தனர். இதில் இறுதியாக 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் இணைந்தது.
செயல்படாமல் தேங்கிய சார்க்
2016ம் ஆண்டு முதல் சார்க் அமைப்பு செயல்படாமல் முடங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு காத்மண்டுவில் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, ஒரு தசாப்தத்துக்கும் மேல் சார்க் நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை.
2016ம் ஆண்டு 19வது சார்க் மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் அப்போது பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரி பயங்கரவாத தாக்குதல் காரணமாக மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் போன்ற நாடுகளும் பயங்கரவாத்தைக் காரணம் காட்டி பின்வாங்கவே, மாநாடு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மாற்றுத்தேதி, இடம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
2020ம் ஆண்டு இந்தியப் பிரதமர் காணொளி வாயிலான சார்க் மாநாட்டை முன்னெடுத்தார். இது கோவிட் அவசரக்கால நிவாரண நிதி வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது.
சார்க்கை பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இணைப்பை உருவாக்கும் அமைப்பாகச் செயல்படுத்த இந்தியா முயலும் சூழலில், பாகிஸ்தான் அதன் பயன்களைப் பெறுவதிலேயே குறிக்கோளாக இருந்தது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் அரசியல்
இந்தியா சார்க் அமைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்ட முக்கிய உறுப்பினராக இருந்துள்ளது. உறுப்பு நாடுகளிடையே கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சார்க் நிதிக்குக் கணிசமான தொகையை வழங்கியுள்ளது இந்தியா. புது தில்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகம் போன்ற முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளது.
மறுபுறம் பாகிஸ்தான் சார்க்கில் அதன் வீட்டோ உரிமையைப் பயன்படுத்தி வர்த்தக நெறிமுறைகள் உருவாக்கம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகள் வகுத்தல் போன்ற முன்னெடுப்புகளை நிறுத்தியது. இது அமைப்பின் செயல்திறனை மட்டுப்படுத்தியது.
உதாரணமாக 2014ம் ஆண்டு சார்க் மோட்டார் வாகன ஒப்பந்தத்தை அதன் வீட்டோ கார்டைப் பயன்படுத்தி நிறுத்தியது பாகிஸ்தான். இதனால் உறுப்பு நாடுகளிடையே எல்லை தாண்டி பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கப்படுவதற்கான முன்மொழிவு நிறுத்தப்பட்டது.
பின்னர் 2015ம் ஆண்டு இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் இணைந்து துணை பிராந்திய BBIN மோட்டார் வாகன ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டன.
இன்றும் இந்தியா, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சார்க் குடையின் கீழ் பேரிடர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக திட்டங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
சீனா – பாகிஸ்தானின் திட்டம் நிறைவேறுமா?
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த மோதலுக்குப் பிறகு சார்க் அமைப்பு மீண்டும் செயல்படுவது பற்றிய பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இணைப்புக்கான மற்றொரு அமைப்பை, இந்தியாவின் ஆதிக்கம் இல்லாத அமைப்பை உருவாக்க இது சரியான நேரம் எனச் சீனாவும் பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சார்க் அமைப்பின் உறுப்பினர்களான இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளையும் இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் புதிய அமைப்பை உருவாக்குவதில் வங்கதேசம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரியவந்துள்ளது.
அந்த நாட்டில் வெளியுறவு ஆலோசகர் எம். தௌஹித் ஹொசைன், “நாங்கள் எந்தக் கூட்டணியையும் உருவாக்கவில்லை. சீனாவில் ஜூன்19ம் தேதி நடைபெற்ற சந்திப்பு அதிகாரிகள் மட்டத்திலானதேயன்றி அரசியல் மட்டத்தில் நடந்தது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
நிச்சயமாகப் புதிய அமைப்பில் இணைவது குறித்த அழைப்பை இந்தியா எதிர்கொள்ளும். ஆனால் அது ஏற்கப்படுமா என்பது சந்தேகமே.
ஏனென்றால் இந்தியா பிராந்திய ஒத்துழைப்புக்கு சார்க் அமைப்பிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.