
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல காவிரியின் துணை ஆறான கபிலா உற்பத்தியாகும் கேரளாவின் வயநாட்டிலும் கனமழை பெய்தது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நேற்று முன் தினம் இரவு முழு கொள்ளளவை (124.80 அடி) எட்டியது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் மகாதேவப்பா, செலுவராயசாமி ஆகியோர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள காவிரி அன்னையின் சிலைக்கு பாகினா சமர்ப்பணப் பூஜை செய்தனர்.