
Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் நாவல் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும் என்று சொல்கிறார்களே… அது எந்த அளவுக்கு உண்மை? சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
நாவல்பழத்திலும் சர்க்கரைச்சத்து இருக்கும். ஆனால், அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்துச் சாப்பிடலாம். கசப்புத்தன்மையும் நார்ச்சத்தும் உள்ள எல்லா உணவுகளுக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கும். சர்க்கரை அளவைக் குறைக்கும், சர்க்கரை நோயே இல்லாமல் செய்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் நாவல் பழ சீசனில் அதை கிலோ கிலோவாக வாங்கிச் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். உண்மையில், அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தானதே…
பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் அதைச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்திலும், சீரகத்திலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் சர்க்கரைநோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை.
இவை எல்லாமே 20 சதவிகிதம் வரை சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்காக ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொள்வதால் தலா 20 சதவிகிதம் சர்க்கரை குறையும் என அர்த்தமில்லை. தனித்தனியாக எடுத்துக்கொண்டாலும், சேர்த்து எடுத்துக்கொண்டாலும் 20 சதவிகிதம் வரை மட்டுமே சர்க்கரை அளவு குறையும்.

இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.