• June 12, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது… என்ன காரணமாக இருக்கும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

முதலில் கொட்டாவி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது வாய்வழியே ஆழ்ந்து சுவாசிப்பது போன்றது. அதாவது  வாய்வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு, ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் நிகழ்வு அது.

அறிவியில்ரீதியாகப் பார்த்தால், நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு சராசரியைவிடக் குறையும்போது, அதை உணர்த்தும் செயலாக கொட்டாவி வரும். இது இயற்கையான நிகழ்வு. கொட்டாவிக்கான முக்கிய காரணம், தூக்கமின்மை. இரவில் போதுமான அளவு தூங்காதவர்கள், நைட் ஷிஃப்ட் காரணமாக தூக்கத்தைத் தவிர்ப்பவர்களுக்கு கொட்டாவி பிரச்னை அதிகமிருக்கும்.

இவை தவிர, ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பவர்களுக்கும், பார்க்கும் வேலையில் சுவாரஸ்யமில்லாமல், சலித்துப் போகும்போதும் வேலை பார்க்கும்போது கொட்டாவி வரலாம்.  இது போன்ற தருணங்களில் மூளையில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அப்போது கொட்டாவி வந்து அதை சமநிலைப்படுத்த முயலும்.

ஸ்ட்ரெஸ், வேலையில் சலிப்பு இருந்தால் கொட்டாவி வரலாம்.

நரம்பியல் மற்றும் மூளை சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் அடிக்கடி கொட்டாவி வரலாம். உதாரணத்துக்கு, வலிப்பு நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple Sclerosis), நார்கோலெப்சி (Narcolepsy)  போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக கொட்டாவி வரும் நிலை இருக்கலாம்.

அதேபோல இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் தொடர் கொட்டாவி வரலாம். உங்கள் விஷயத்தில் உங்கள் வயது, ஏதேனும் உடல்நல பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா, குறிப்பாக, மனப்பதற்றம் இருந்து அதற்கான ‘செலக்டிவ் செரோடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்ஸ்’ (Selective Serotonin Reuptake Inhibitors) மருந்துகள் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதெல்லாம் பார்க்கப்பட வேண்டும். இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் உங்களுக்குத் தொடர்ச்சியாக கொட்டாவி வருகிறது என்றால், மூளைக்கு  ஈஈஜி (EEG) எனப்படும் எலக்ட்ரோ என்செபலோகிராம் (Electroencephalogram)  டெஸ்ட்  செய்து பார்த்துவிட்டு பிறகு சிகிச்சைகளை யோசிக்கலாம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *