
சென்னை: “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுய் பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.