
Doctor Vikatan: என் மகளுக்கு வயது 17. அவள் மிகவும் மெலிந்து காணப்படுகிறாள் .160 செ.மீ உயரம் இருக்கிறார். அவரது உடல் எடை 33 அல்லது 34-க்கு மேல் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பீரியட்ஸ் நாள்களில் மிகவும் பலவீனமாக காணப்படுகிறாள். நன்றாகச் சாப்பிடுகிறாள். ஆனாலும், அவள் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லை. டாக்டரிடம் சென்று பரிசோதித்தால் ஒரு பிரச்னையும் இல்லை என்கிறார். அவரது உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டுமா? இந்தப் பிரச்னைக்கு வேறு என்னதான் தீர்வுகள்?
– SATHYAN, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
ஒருவரது பி.எம்.ஐ (BMI) அளவீட்டை வைத்துதான் அவரது உடல்எடை சாதாரணமாக இருக்கிறதா, இல்லையா என்பதைச் சொல்ல முடியும். பிஎம்ஐ அளவீடானது 18.5-க்கும் குறைவாக இருந்தால் அந்த நபர் அண்டர்வெயிட்டில் (under weight) இருக்கிறார் என்று சொல்வோம். உங்களுடைய மகளின் பிஎம்ஐ அளவீடு, 18.5-க்கும் குறைவாக இருப்பதால் அவர் அண்டர்வெயிட் பிரிவில்தான் வருவார்.
உங்கள் மகளின் உயரத்துக்கு, அவர் 45- 50 கிலோவரை எடை இருக்க வேண்டும். ஆனால், அவர் 33 கிலோதான் இருக்கிறார் என்பதை மிகக்குறைவான உடல் எடையாகத்தான் கணக்கிட வேண்டும்.
உடல் எடை குறைவாக இருப்பதால் உடலளவில் நிறைய பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு, எலும்புத் தேய்மானம், ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு, சருமம் மற்றும் கூந்தலில் பாதிப்பு, பற்களில் பிரச்னை போன்றவை வரலாம்.
உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எனர்ஜி குறைவாக இருக்கும். அதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வரலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். எப்போதும் களைப்பாக உணரலாம். பீரியட்ஸ் சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். திருமணத்துக்குப் பிறகு கருத்தரித்தால், குறைமாதப் பிரசவம் ஏற்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம்.

உங்கள் மகள் எடை குறைவாக இருக்க என்ன காரணம் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் எடை குறைவாக இருக்க, அவரது குடும்பப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் அனைவரும் எடை குறைவாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படி இருக்கலாம்.
சிலருக்கு மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றச் செயல்பாடு மிக அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் எடை கூடாது. ஒருவர் உடல்ரீதியான இயக்கத்தில் அதிகம் ஈடுபடுபவராக இருந்து, அதற்கேற்ப சாப்பிடாமல் இருந்தாலும் எடை குறைவாக இருக்கலாம். உதாரணத்துக்கு, விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுபவராக இருக்கலாம்… குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளைச் சாப்பிடும் பட்சத்தில் அவருக்கு உடல் எடை ஏறாது.
ஏதேனும் தீவிர உடல்நலப் பிரச்னை இருந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடல் எடை ஏறாது. தைராய்டு பிரச்னை, நீரிழிவு, குடல் சார்ந்த பிரச்னை, உணவு ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேராமல், எடை குறையலாம். புற்றுநோய் பாதிப்புக்கும், உடல் எடை குறைவது மிக முக்கியமான ஓர் அறிகுறி.
உங்கள் மகள் விஷயத்தில் அவர் நன்றாகச் சாப்பிடுவதாகச் சொல்லியிருப்பதால், அந்த ரிஸ்க் இருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் இருந்தால் பசி எடுக்காது. டிப்ரெஷன், மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்னைகள், அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உண்ணுதல் குறைபாடு உள்ளவர்களுக்கும் உடல் எடை குறைவாக இருக்கலாம்.

எனவே, உங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு அளவு போன்றவற்றைப் பரிசோதியுங்கள். சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவை தேவைப்படலாம்.
ஹார்மோன் பிரச்னைகள் இருந்தால், எண்டோகிரைனாலஜிஸ்ட் எனப்படும் நாளமில்லா சுரப்பியியல் சிகிச்சை மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம். அதிக புரதச்சத்தும், முழுத்தானியங்களால் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டும் உள்ள உணவுகளை எடுக்கும்போது உடல் எடை அதிரிக்கும். உதாரணத்துக்கு, பீநட் பட்டர், புரோட்டீன் பார் போன்றவை.
அசைவம் சாப்பிடுவோர், நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் சிறு இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். தினம் கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடலாம். கலோரி அடர்த்தியான உணவுகளைச் சாப்பிடலாம்.
இத்தனை நாள்கள் உடல் எடை சரியாக இருந்து, திடீரென குறையத் தொடங்கினாலோ, மற்றவர் முன்னிலையில் சாப்பிடாமல் மறைந்து மறைந்து சாப்பிட்டாலோ, களைப்பாக உணர்ந்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டும். டெஸ்ட்டுகள் செய்து நார்மலாக இருக்கும்பட்சத்தில், உணவியல் ஆலோசரின் உதவியோடு, எடையை அதிகரிக்கச் செய்கிற உணவுகளைச் சாப்பிட வைக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.