• June 1, 2025
  • NewsEditor
  • 0

தெரிந்த விஷயம்தான்; ஏற்கெனவே பலமுறை பார்த்த விஷயம்தான் – என்றாலும் மாணவர்களின் பார்வையில் இருந்து அதே விஷயத்தைப் பார்க்கும்போது புதிதாகத் தெரிகின்றன. நாம் குறிப்பிடுவது, மஹிந்திராவின் மின்சார வாகனங்களான XEV 9e மற்றும் BE 6 ஆகியவற்றின் உருவாக்கம். இந்த வாகனங்களை அது உருவாக்கப்பட்ட இடத்திற்கே சென்று பார்ப்பது என்பது ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது. மேலும் அதை உருவாக்கியவர்களே இந்த வாகனங்கள் உருவம் பெற்ற கதையை… அதன் பின்னணியில் இருக்கும் பொறியியல் பௌதிகத் தத்துவங்களை விளக்கக் கேட்ட போது… அவற்றின் மீது இருந்த ஈர்ப்பு இருமடங்காகியது.

XUV700, தார், தார் ராக்ஸ், ஸ்கார்ப்பியோ N, ஸ்கார்பியோ க்ளாஸிக், XUV400, XUV 3XO என ஒவ்வொரு வாகனங்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தும்போதும்… அது குறித்த பயிலரங்கங்களை மாணவர்களுக்காகத் தொடர்ச்சியாக நடத்தி இருக்கிறோம். என்றாலும், கடந்த மே மாதம் 10-ம் தேதி மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் மோட்டார் விகடன் நடத்திய பயிலரங்கம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

காரணம்… இது Born Electric கார்களுக்கான பயிலரங்கம் என்பது மட்டுமல்ல… இவை உருவான இயங்குதளமும் (INGLO Platform) முற்றிலும் புதியது.

இந்த மின்சார வாகனங்களை உருவாக்கிய பொறியாளர் பட்டாளத்தை வழிநடத்திய வேலுசாமியின் உற்சாகமான அறிமுக உரையோடு துவங்கிய இந்தப் பயிலரங்கத்தில் மாணவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்படி அமைந்திருந்தது INGLO இயங்குதளம் குறித்த டாக்டர் விக்ரமனின் விளக்க உரை.

மின்சார வாகனங்கள் என்றாலே… பேட்டரியில் மழை நீர் பட்டால் என்ன ஆகும்… அதிக சூடு ஏறினால் என்ன ஆகும்… எதிலாவது மோதினால் என்ன ஆகும் என்று ஏகப்பட்ட கேள்விகள் எழும். இதற்கெல்லாம் பதில் சொல்வதைப்போல அமைந்து இருந்தது பிரவீன் பன்சோடே மற்றும் ஜிபின் பால் குழுவினர் அளித்த விளக்கம்.

உள்ளரங்கில் நடைபெற்ற இந்த தொடர் உரைகளை அடுத்து, இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மஹிந்திராவின் குழுவினர் நேரிலும் விளக்கம் கொடுக்க… மாணவர்கள் அத்தனை பேரும் பரவசத்தில் மெய்மறந்து போனார்கள்.

`அடுத்த பயிலரங்கம் எப்பொழுது?’ என்ற கேள்வியோடு மாணவர்கள் அத்தனை பேரும் பிரியவே மனம் இல்லாமல் விடைபெற்றுச் சென்றார்கள். பார்த்த விஷயம்தான், தெரிந்த விஷயம்தான் என்றாலும், மாணவர்களின் கண்களின் வழியே அதைப் பார்ப்பது புதிய அனுபவமாக அமைந்திருந்தது.

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *