• May 31, 2025
  • NewsEditor
  • 0

மிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, ‘பட்டர் பியூட்டி’ன்னு கொண்டாடப்பட்ட நடிகை லதா பத்திதான் தெரிஞ்சுக்கப்போறீங்க.

நடிகை லதா

ராமநாதபுரம் ராஜ குடும்பத்துல பிறந்த நளினி, ‘லதா’வா தென்னிந்திய சினிமாக்கள்ல கொடிக்கட்டிப் பறந்ததுக்கு முக்கியமாக காரணம், அவங்களுக்கு சினிமாவுல நடிக்கணும்னு இருந்த ஆசைதான் காரணம்னு சொல்லியே ஆகணும். அப்பா, சண்முக ராஜேஸ்வர சேதுபதி அரசியல்வாதி. ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்திருக்கார். அம்மா லீலா ராணி குடும்பத்தலைவி. லதாவுக்கு 12 வயசு ஆகுறப்போவே அவங்கப்பா இறந்திடுறார். அதுக்கப்புறம் அவங்கம்மாதான் எல்லாமுமா இருந்திருக்காங்க.

ரேடியோவுல பாட்டுக் கேட்டாலே டான்ஸ் ஆட ஆரம்பிக்கிற அளவுக்கு சினிமா மேல ஆர்வமா இருந்திருக்காங்க லதா. தான் படிச்ச ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்ல டான்ஸ், டிராமான்னு என்ன கலை நிகழ்ச்சி நடத்தினாலும் லதா கண்டிப்பா அதுல பங்கெடுத்துப்பாங்களாம். ஆனா, அவங்க அம்மாவுக்கோ சினிமா பிடிக்காதாம். ஆனா, எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்தானே.

நடிகை லதா
நடிகை லதா

நடிகர் மனோகரோட நாடகங்களை போட்டோ எடுக்கிறவர்தான், லதா படிச்ச ஸ்கூலோட நிகழ்ச்சிகளையும் போட்டோ எடுப்பாராம். அவர் எடுத்த ஒரு போட்டோவுல லதாவும் இருந்திருக்காங்க. நடிகர் மனோகரும், எம்.ஜி.ஆரும் பேசிக்கிட்டிருந்தப்போ ஒருநாள், அந்த போட்டோகிராபர் தான் எடுத்த போட்டோக்களை மனோகர் கிட்ட கொடுக்க, அந்த போட்டோக்கள்ல லதாவோட போட்டோவும் இருந்திருக்கு. அது யதேச்சையா எம்.ஜி.ஆர் கண்கள்ல பட்டிருக்கு. அந்த நேரத்துல தான், அவர் தன்னோட உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக ஹீரோயின் தேடிக்கிட்டு இருந்திருக்கார்.

லதாவை அந்தப் படத்துல நடிக்க வைக்கலாம்னு எம்.ஜி.ஆர் முடிவு பண்ண, மனோகர், லதாவோட அம்மாவை சந்திச்சு விஷயத்தை சொல்றார். ஆனா, அவங்க ஒத்துக்கல. ‘என் பொண்ணு இப்போ தான் ஒன்பதாம் வகுப்பு முடிச்சிருக்கா. அவ படிக்கணும்னு சொல்லிட்டாங்களாம். எம்.ஜி.ஆரும் லதாவோட அம்மாகிட்ட பேச, அவருக்கும் அதே பதிலைதான் சொல்லியிருக்காங்க. ஆனா, லதா நடிக்கிறதுல ரொம்ப ஆர்வம் காட்ட, மகளுக்காக யெஸ் சொல்லியிருக்காங்க. அப்புறம் நளினிக்கு ‘லதா’ன்னு பேர் மாத்தியிருக்கார் எம்.ஜி.ஆர்.

தமிழ் உச்சரிப்புக்கு, நடனத்துக்குன்னு சினிமாவுல நடிக்கிறதுக்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் முறைப்படி எடுத்துக்கிட்டு, உலகம் சுற்றும் வாலிபன்ல 1973-ல அறிமுகமாகுறாங்க லதா. அடுத்த அஞ்சு வருஷங்கள்ல நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன், நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்னு வரிசையா எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிக்கிறாங்க.

ரசிகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் லதான்னே அழைக்க ஆரம்பிக்கிறாங்க. சிவாஜிகூட ‘சிவகாமியின் செல்வன்’லேயும் நடிச்சிருக்காங்க லதா. எம்.ஜி.ஆர், சிவாஜிகூட நடிச்சிருந்தாலும் லதா ரொம்ப இளையவங்க அப்படிங்கிறதால, ரஜினி, கமல், விஜயகுமார், ஜெய்கணேஷ், ஶ்ரீகாந்த், முத்துராமன், சரத்குமார், சிவகுமார்னு அந்தக் காலகட்டத்துல இருந்த யங் ஹீரோக்கள் கூடவும் நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க.

நடிகை லதா
நடிகை லதா

லதாவோட மாஸ்டர் பீஸ் படங்கள்னா அவை, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ மற்றும் ‘வட்டத்துக்குள் சதுரம்’னு தைரியமா சொல்லலாம். அந்தளவுக்கு நடிப்புல உருக வெச்சிருப்பாங்க அந்த ரெண்டு படங்கள்லேயும்.

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்துல லதாவோட அழகுதான் படத்தோட மையக்கருவே. லதாவோட அழகால ஈர்க்கப்பட்டு விஜயகுமார் அவங்களை லவ் பண்ண, லதா ஏற்கெனவே ஜெய் கணேஷை லவ் பண்ணிட்டிருப்பாங்க. தனக்கு ஆதரவா இருந்த அண்ணணும் அண்ணியும் இறந்துபோவது; நம்பின காதலனே கூல்ட்ரிங்க்ல மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் அத்துமீறல் செஞ்சிட்டு ஓடிப்போனது தெரிஞ்சதும் தூக்க மாத்திரை சாப்பிட்டு நடைபாதையில இருக்கிற ஸ்டோன் பெஞ்ச் மேல லதா படுத்துக்கிடக்கிற ஒரு சீன் போதும், அவங்க நடிப்புத்திறமைக்கு ஆதாரம் சொல்ல.

இந்தப்படத்தை டைரக்டர் ஶ்ரீதர் ஒரே நேரத்துல தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகள்லேயும் எடுத்தார். மூணு மொழிகள்லேயும் மூணு ஹீரோக்கள். ஆனா மூணு மொழிகள்லேயும் ஹீரோயின் லதாதான். ‘விஜயகுமாரோட தமிழ்ல டயலாக் பேசி முடிச்சதும், முரளி மோகன்கூட அதே டயலாக்கை தெலுங்குல பேசணும். அடுத்து ஶ்ரீநாத்கூட அதே டயலாக்கை கன்னடத்துல பேசணும். ரொம்ப சவாலா இருந்துச்சு’ன்னு தன்னோட பேட்டி ஒண்ணுல லதாவே சொல்லியிருக்காங்க.

நடிகை லதா
நடிகை லதா

அடுத்தது வட்டத்துக்குள் சதுரம். அப்பா பேர் தெரியாத பொண்ணு கேரக்டர். உயிர்த்தோழியோட அண்ணணுக்கு லவ் லெட்டர் கொடுக்க, அதனால ஊரே சேர்ந்து லதாவை அடிச்சு அவமானப்படுத்தும். தோழியை அழைச்சிக்கிட்டு ஊரைவிட்டு சென்னைக்கு ஓடி, அங்க பாலியல் தொழில் செஞ்சு தோழியை படிக்க வெப்பாங்க. ஶ்ரீகாந்த்தை ஒருதலையா காதலிக்கிறது, காதலிச்சவனாலேயே அவமானப்படுறது, தோழியை வாழ வெக்க தன்னோட வாழ்க்கையைகூட அழிச்சிப்பேன்கிற கேரக்டர் இந்தப் படத்துல லதாவுக்கு.

கதை முழுக்க லதாவை சுத்தித்தான் இருக்கும். தான் ஒருதலையா காதலிச்சவனுக்கு, தன் கையால சாப்பாடு போடுற சீன்ல, லதா தன்னோட சினிமா கரியரை எந்தளவுக்கு நேசிக்கிறாருன்னு தெரியும். லதா மேல இருந்த கிளாமர் டால்ங்கிற அடையாளத்தை இந்த ரெண்டு படங்களும் சுத்தமா துடைச்சி எறிஞ்சிடுச்சுன்னே சொல்லலாம். தன்னோட நடிப்புத்திறமைக்காக ஃபிலிம்ஃபேர் விருதையும், ஆந்திர அரசோட விருதையும் பெற்றிருக்காங்க நடிகை லதா. இவங்களோட கலைத்துறை பங்களிப்புக்காக தமிழக அரசோட கலைமாமணி விருதும் வழங்கப்பட்டிருக்கு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு இதுவரைக்கும் 200 படங்களுக்கு மேலே நடிச்சிருக்காங்க லதா. தன் கரியரோட உச்சத்துல இருக்கிறப்போவே லதா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு காரணம், தன் அம்மாவோட விருப்பம்னு சொல்றாங்க. சபாபதி அப்படிங்கிற சிங்கப்பூர் தொழிலதிபரை கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அங்கேயே செட்டிலானவங்க குடும்பம், குழந்தைன்னு கிட்டத்தட்ட 14 வருஷங்கள் கழிச்சு மறுபடியும் படங்கள், சீரியல்கள் நடிக்க ஆரம்பிச்சாங்க.

நடிகை லதா
நடிகை லதா

”எம்.ஜி.ஆர் என்னை ரெண்டு முறை அரசியலுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டார். முதல்முறை நடிப்பு மேல இருந்த ஆர்வத்துல மறுத்துட்டேன். ஆனா, கட்சிக்காக நிதி திரட்டுறதுக்கு தமிழ்நாடு முழுக்க நாட்டிய நாடகம் நடத்தி 35 லட்சம் கொடுத்தேன். ரெண்டாவது முறை, என் மகன்களுக்காக மறுத்துட்டேன். நான் படிக்கிற வயசுல நடிக்க வந்துட்டேன். அதனால, என் ரெண்டு பசங்களையும் லண்டன்ல ஹையர் ஸ்டடீஸ் பண்ண வெச்சேன். என் உலகமே என் குடும்பம்தான். எங்கம்மா தவறினப்போ என் தங்கைக்கு 12 வயசுதான். அம்மா ஸ்தானத்துல அவளை வளர்த்து கல்யாணம் செஞ்சுக்கொடுத்தேன். ரெண்டு பசங்களும் அவங்களோட வெளிநாட்டுல வந்து இருக்க சொல்றாங்க.

ஆனா, எனக்கு சென்னையில இருக்கிற என் வீடுதான் சொர்க்கம். பிடிச்ச சாப்பாடு, தியானம்னு நிம்மதியா இருக்கேன். நான் இங்க இருந்தாதான் என்கூட பிறந்தவங்க எல்லாம் வருவாங்க. எனக்கு உறவுகள் ரொம்ப முக்கியம்”னு தன்னோட வாழ்க்கைப்பத்தின ஒரு பேட்டியில ரொம்ப யதார்த்தமா ஷேர் பண்ணியிருக்காங்க நடிகை லதா.

ஹேப்பி ஃபார் யூ லதா மேம்!

(நாயகிகள் வருவார்கள்)

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *