• May 30, 2025
  • NewsEditor
  • 0

குங்ஃபூ வீரரான லி ஃபாங் (பென் வாங்), தனது தாயுடன் பீஜிங்கிலிருந்து நியூயார்க்குக்கு குடியேறுகிறான். அண்ணனின் மரணத்தால் மன உளைச்சலில் இருக்கும் லி, குங்ஃபூவில் தேர்ந்தவனாக இருந்தாலும் மீண்டும் சண்டையிட மறுக்கிறான். நியூயார்க்கில் பீட்சா கடை வைத்திருக்கும் மியா மற்றும் அவளது தந்தை விக்டர் ஆகியோருடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. விக்டர், கடனில் மூழ்கி, உள்ளூர் ரவுடிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார். அந்த நேரத்தில், கடனை அடைக்க ஒரு பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுக்கிறார். அவருக்குப் பயிற்சி அளிக்கிறான் லி. ஆனால், போட்டியில் கடுமையான காயமடைந்து விக்டர் மருத்துவமனைக்குச் செல்கிறார். இதே நேரத்தில், மியாவின் முன்னாள் காதலனும் கராத்தே சாம்பியனுமான கானர் (அரமிஸ் நைட்) கலந்துகொள்ளும் மற்றொரு போட்டிக்கான அறிவிப்பு வருகிறது. மீண்டும் அதிரடி சண்டையைக் கையில் எடுக்கும் தருணம் வரும்போது லி என்னவெல்லாம் செய்தான் என்பதே இந்த ‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ படத்தின் கதை.

Karate Kid: Legends Review

கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் என எந்த தற்காப்புக் கலையாக இருந்தாலும், “கோதாவுக்கு நான் ரெடிதான், வரவா?” என கண்கவர் வித்தைகளைச் சண்டைக் காட்சிகளில் காட்டி கலக்கியிருக்கிறார் பென் வாங். குறிப்பாக, உணர்ச்சி நிறைந்த காட்சிகளில் துக்கத்தையும், காதல் காட்சிகளில் மென்மையையும், சண்டைக் காட்சிகளில் உறுதியையும் இயல்பாக வெளிப்படுத்தி, நடிப்பிலும் சாம்பியனாகிறார். பயிற்சியாளராக வரும் ஜாக்கி சான், சாகசங்கள் குறைவாக இருந்தாலும், “வயதானாலும் அந்த ஸ்டைலும் குறும்பும் குறையவில்லை” எனப் பழைய நினைவுகளைக் கிளறுகிறார். மேலும், இந்த ஃப்ரான்சைஸின் ஆதிக்குடியான ரால்ஃப் மாக்கியோவும் களத்தில் இறங்க, ‘மூன்று டிராகன் டெம்ப்ளேட்’ கண்ணுக்கு முன் வந்து போகிறது. நாயகி சேடி ஸ்டான்லியின் ‘க்யூட்’ ரொமான்ஸ் நம் முகத்தில் புன்னகையைப் பூக்கச் செய்கிறது.

95 நிமிட படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லை. திரைக்கதை வேகமாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் நகர்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் அதிரடி சரவெடி காட்டும் ஜாக்கி சானின் ஸ்டண்ட் குழு உருவாக்கிய சண்டைக் காட்சிகள் படத்தின் உயிர்நாடி. பல்வேறு தற்காப்புக் கலைகளை நுட்பமாக இணைத்து, சண்டைக் காட்சிகள் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், “டிராகன் கிக்” போன்ற புதிய நகர்வுகள் பிரமிக்க வைத்து, திரையைத் தீப்பிடிக்கச் செய்கின்றன. ஜாக்கி சானின் மென்மையான புன்னகையும், நகைச்சுவையும் படத்துக்கு உயிர் கொடுக்கின்றன. ரால்ஃப் மாக்கியோவுடனான அவரது கிண்டல் உரையாடல்களும் சுவாரஸ்யமாகவே உள்ளன.

Karate Kid: Legends Review

டொமினிக் லூயிஸின் இசையும், ஜஸ்டின் ப்ரவுனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. நியூயார்க்கின் துடிப்பான பின்னணியும், வீடியோ கேம் பாணியிலான போட்டிக் காட்சிகளும் கண்ணைக் கவர்கின்றன.

அதே சமயம் முதல் மோதல் முடிந்தவுடன், அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. நமது தமிழ்ப் படங்களான ‘பத்ரி’, ‘எம்.குமரன்’ போன்ற படங்களைப் போலவே, இதுவும் அதே பார்முலாவைப் பின்பற்றுவது பழகியவையாக இருந்தாலும், அதைப் பிரமாண்டமாகப் பார்ப்பது குதூகலமான உணர்வை அளிக்கிறது.

தேவையில்லாத காட்சிகள் என்று எதுவும் இல்லையென்றாலும், இன்னும் சில காட்சிகளும் எமோஷன்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம். அவசரமான எடிட்டிங் காரணமாக, உணர்ச்சிகரமான காட்சிகள் தூண்டப்பட்டு, முழுமையான உணர்வு நிலையை அடையாமல் ஆழமற்றவையாக முடிகின்றன. குறிப்பாக, மியா மற்றும் விக்டர் போன்ற கதாபாத்திரங்கள் முழுமையாக வளரவில்லை. அதேபோல், ஜாக்கி சான் மற்றும் மாக்கியோவின் கதாபாத்திரங்களுக்கும் தனிக் கவனம் கொடுத்து எழுதியிருக்கலாம். ஜாக்கி சானின் புதிய தமிழ் டப்பிங் குரல் ஒட்டவில்லை. மேலும், சென்ற பாகத்தின் ‘பீக் சினிமா’ அனுபவத்தைப் பாதியளவே தொடுகிறது இந்தப் படம்.

Karate Kid: Legends Review

மொத்தத்தில், உணர்வுபூர்வமான காட்சிகளும், அட்டகாசமான சண்டைக் காட்சிகளும் நிறைந்த இந்த ‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ குடும்பத்துடன் பார்க்க விரும்புவோருக்கு அட்டகாசமான நாஸ்டால்ஜியா விருந்தாக இருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *