
சென்னை: கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிகத் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.