
நடிகர் விஜய்யுடன் யாரெல்லாம் கூட்டணி சேரப் போகிறார்கள்… அல்லது அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதே புரியாத புதிராக இருக்கையில், அவரை மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடச் சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள். இருந்தாலும் இதில் மதுரை மேற்கு மட்டும் ஸ்பெஷல். காரணம், இது எம்ஜிஆர் போட்டியிட்டு வென்ற தொகுதி. எம்ஜிஆர் வென்ற பழைய மேற்கு தொகுதிக்கான எல்லைகள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுவிட்ட போதும், இன்னமும் இது அதிமுக-வுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 6 முறை அதிமுக வென்றுள்ளது. 2011 தொடங்கி இப்போது வரைக்கும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. இம்முறை இந்தத் தொகுதியை ராஜூவிடம் இருந்து கைப்பற்ற அமைச்சர் மூர்த்திக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறது திமுக தலைமை.