
புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த போலி டாஸ்மாக் மதுபான தொழிற்சாலையை, சில தினங்களுக்கு முன்பு தமிழகப் போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய எம்.பி வைத்திலிங்கம், “புதுச்சேரி மதுபான கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று கவர்னரை ஏற்கெனவே சந்தித்து புகாரளித்திருந்தேன்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சரின் இடத்தில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த போலி மதுபானங்கள் தமிழகத்துக்குக் கடத்தப்பட்டது மட்டுமின்றி, புதுச்சேரியிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடமும் கூறியிருந்தேன்.
புதுச்சேரியில் செயல்பட்ட இந்த போலி மதுபான தொழிற்சாலையைக் கண்டுபிடித்து தமிழகப் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். ஆனால் அந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அவர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுமக்களின் வருமானத்தைச் சுரண்டும் அமைச்சராகவே அவரைப் பார்க்கிறோம். அவருக்கு உறுதுணையாக இருந்து வருவாயை பங்கிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி கூட்டிய நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.
புதுச்சேரி பா.ஜ.க-வுக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ? பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் ஒரு முதல்வர் மோடியை எதிர்க்கிறார். அதைத் தட்டிக் கேட்கும் அளவில் கூட இங்கு பா.ஜ.க இல்லை. அவர்கள் முதல்வர் ரங்கசாமியின் கால்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் பதவியில் அமர்ந்து மக்களைக் கொள்ளைடித்து வருகின்றன” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றன. வேளாண்துறை அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ஏற்கெனவே 6 டன் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அதே இடத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தியதும் தேரிய வந்திருக்கிறது.
இதேபோல அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான ஆலை விவகாரத்தில், புதுச்சேரி கலால்துறை எடுத்த நடவடிக்கை என்ன ? இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.