
மதுரை: மதுரை மாநகராட்சி விரிவாக்கம் நடைபெற்ற 14 ஆண்டுகளுக்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் நீடித்த ‘வார்டு எண்’ குழறுபடிகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் முதல் முறையாக இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களில் அவர்கள் குடியிருக்கும் வார்டு எண்கள் குறிப்பிட்டே வழங்கப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு 1971-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் மாநகராட்சி என்ற பெருமையை பெற்றது மதுரை. ஆரம்ப காலத்தில் மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகளும், 4 மண்டலங்களும் மட்டுமே இருந்தன. கடந்த 2011-ம் ஆண்டு, ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய 3 நகராட்சிகள், ஹார்விப்பட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. வார்டுகள் எண்ணிக்கை 72 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளாகவும், மண்டலங்கள் எண்ணிக்கை 5-ஆகவும் உயர்ந்தது. வார்டுகளும் மறுசீரமைக்கப்பட்டு, வார்டு எண்களும் மாற்றப்பட்டன.