
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையும் நிலையில், காலியாகும் அந்த ஆறு இடங்களுக்கு தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க தரப்பில், வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கியுள்ளது அறிவாலயம். அந்த ஒரு சீட்டில், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிர்வாகக்குழுவில் முடிவெடுத்துள்ளனர். மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கான வேலைகளில் தி.மு.க தரப்பு மும்முரம் காட்டி வரும் நிலையில், நாளை(மே 29) தான், நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க-வின் வேட்பாளர்கள் யார், யார்?
“அ.தி.மு.க-வின் வேட்பாளர்கள் யார், யார்..? வெற்றிப்பெற என்ன வியூகம் வகுக்கப்பட்டுள்ளது…” என்ற கேள்வியுடன் அக்கட்சியின் இரண்டாம்கட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ஒரு எம்.பி சீட்டில் வெற்றிப்பெற 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், இரண்டு எம்.பி-க்களை தேர்வு செய்ய அ.தி.மு.க-வுக்கு 68 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. 2021 சட்டமன்றத் தேர்தலில், கே.வி.குப்பத்தில் இரட்டை இலையில் ஜெயித்த பூவை ஜெகன்மூர்த்தியுடன் சேர்த்து 66 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வுக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கையுடன், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் நான்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கிடைத்துவிட்டால், எளிதாக இரண்டு எம்.பி-க்களை மாநிலங்களவைக்கு அ.தி.மு.க அனுப்பிவிடலாம். ஆனால், அதில்தான் சிக்கலும் முளைத்தது.
ஏற்கெனவே, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களாக அங்கீகரிக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளித்திருந்தது அ.தி.மு.க. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரம் சூடுபிடித்த நிலையில், நீதிமன்றத்திலும் ‘ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவரை கட்சியின் எம்.எல்.ஏ-க்களாக அங்கீகரிக்க முடியாது’ என வாதிட்டோம்.
ஓ.பி.எஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி ஐயப்பன் எங்கள் பக்கம் இல்லை என்றாலும், கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை என்பதால், சட்டமன்ற அ.தி.மு.க கொறடா இடும் உத்தரவை அவர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆக, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கழித்துவிட்டால், அ.தி.மு.க உறுப்பினர்களின் பலம் 63 ஆக இருக்கிறது. அதனோடு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துக்கொண்டால்கூட, இரண்டு எம்.பி-க்களை வெற்றிப்பெற வைக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்கவில்லை.

அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சேலத்தில் நடந்தது. சட்டரீதியாகவுள்ள இடர்பாடுகள் விவாதிக்கப்பட்டன. அப்போது, ‘நாம் அளித்த கடிதத்தை சபாநாயகர் வாங்கி வைத்துக்கொண்டாரே தவிர, எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கட்சி சாரா உறுப்பினர்களாக அறிவிக்கவில்லை. சட்டப்பேரவை விதிகளின்படி பார்த்தால், அவர்கள் மூவருமே இன்று வரையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களாகத்தான் தொடர்கிறார்கள்.
ஆகவே, அ.தி.மு.க கொறடா வேலுமணி இடும் உத்தரவுக்கு அவர்கள் மூவரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நமது எம்.எல்.ஏ-க்களின் பலம் 66 ஆகவே தொடர்கிறது’ என வழக்கறிஞரணி நிர்வாகிகள் சிலர், எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர். அதன்பின்னர்தான், இரண்டு வேட்பாளர்களுக்கான பரிசீலனையிலேயே தீவிரமாக இறங்கினார் எடப்பாடி.
டெல்லி செல்லும் ஜெயக்குமார்?
கடந்தமுறை சி.வி.சண்முகத்திற்கு மாநிலங்களவை எம்.பி சீட் அளித்தபோதே, தனக்கும் வாய்ப்பை எதிர்பார்த்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், குறுக்கே புகுந்து தன்னுடைய ஆதரவாளரான முதுகுளத்தூர் தர்மருக்கு சீட் பெற்றுக் கொடுத்துவிட்டார் ஓ.பி.எஸ். அதன் தொடர்ச்சியாகவே பெரும் களேபரம் வெடித்து, ஓ.பி.எஸ் உட்பட பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்தமுறையும் தனக்கு சீட் எதிர்பார்த்திருக்கும் ஜெயக்குமார், ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் ராயபுரம் தொகுதியிலுள்ள சுமார் 40 ஆயிரம் சிறுபான்மை சமூக வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழாமல் போகலாம். ஆகவே, என்னை எம்.பி-யாக்கிவிடுங்கள்’ என கட்சி மேலிடத்திடம் கேட்டிருக்கிறார்.
அவர் எதிர்பார்த்த மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை முன்னாள் அமைச்சர் வளர்மதியும் எதிர்பார்ப்பதால், ஜெயக்குமாரை எம்.பி-யாக்கி டெல்லிக்குப் பார்சல் செய்ய மேலிடமும் ஆலோசித்திருக்கிறது.

இரண்டாவது எம்.பி சீட், அ.தி.மு.க-வின் அம்மா பேரவை இணைச் செயலாளரான சதன் பிரபாகருக்கு வழங்கப்பட வாய்ப்புகள் தென்படுகின்றன. முன்னாள் எம்.பி நிறைகுளத்தானின் மகனான சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிரமான ஆதரவாளர். அந்த ரூட்டில்தான், கட்சி மேலிடத்தையும் நெருங்கியிருக்கிறார் சதன் பிரபாகர். ‘தென்மாவட்டங்களில், பள்ளர் சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு சதன் பிரபாகரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என உதயகுமார் கொடுத்த ஐடியாவை, தீவிரமாகவே பரிசீலிக்கிறது மேலிடம். இதற்கிடையே, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க தரப்புகளிலிருந்து, ‘எங்களுக்கு ஒரு சீட்டு ஒதுக்க வேண்டும்’ என ஆளாளுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை எடப்பாடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றனர் விரிவாகவே.
நாளை(மே 29-ம் தேதி) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டவிருக்கும் எடப்பாடி, மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அவர்களுடன் ஆலோசிக்கவிருக்கிறார். “ஜூன் 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவிருப்பதால், இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்” என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்.