
மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும் சூழலில் அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்றும் நிலையங்களை ஒழுங்காக பராமரித்து சரியாக இயக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. ஹிண்ட்மடா, காந்தி மார்கெட், யெல்லோ கேட் மற்றும் சுன்னாபட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள மழைநீர் வெளியேற்று நிலையங்களின் ஒப்பந்ததாரர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள், மேற்கூறிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மழைநீர் வெளியேற்ற நிலையங்கள் போதுமான அளவில் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்டதாக இல்லை. இதனாலேயே மழை நீர் தேங்கி பரவலாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நகர வளர்ச்சிக்கு ஏற்ப மழை நீர் வெளியேற்ற நிலையத்தின் திறனை மேம்படுத்த வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது“ என்றார்.