
அரசு மருத்துவரும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவருமான எஸ்.பெருமாள் பிள்ளை, தமிழக அரசு, அரசு மருத்துவர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற தவறுகிறது என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். விரைவில் அரசுக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுக்க இருக்கிறார்கள் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய எஸ்.பெருமாள் பிள்ளை, “சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பெருமையாகப் பேசுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியமே தரப்படுகிறது. அதுதான் மன வேதனையாக இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்ற மருத்துவர்கள் இல்லை. இதனால் மருத்துவர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. கூட்டம் அதிக இருக்கும் சமயத்தில் எங்களிடம் மருத்துவர்கள் கடிந்துக்கொள்கிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலைப்பளுவும் அதிகம், மக்களிடம் நல்லப்பெயரும் எங்களுக்கு கிடையாது.
இந்த சூழ்நிலையில்தான் நாங்கள் பணி செய்து வருகிறோம். மக்களின் வாழ்நாளை நாங்கள் அதிகரித்திருக்கிறோம் ஆனால் அரசு மருத்துவர்களின் வாழ்நாள் குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இளம் மருத்துவர்களின் இறப்பு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. பணிச்சுமை அந்த அந்தளவிற்கு அதிகமாக இருக்கிறது.
இதை சுகாதார அமைச்சரிடம் சொன்னால் தமிழ்நாட்டில் அந்த அளவிற்கு எல்லாம் பணிச்சுமை இல்லை என்கிறார். ‘திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அந்த அளவிற்கு சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறோம்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதாரதுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சொன்னார்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மருத்துவர்கள் மிக முக்கியக் காரணமாக இருக்கின்றனர். கொரோனா சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளே திணறிக்கொண்டிருந்தன. அப்போது இந்தியா என்ன ஆகப்போகிறது என்று எல்லோரும் பேசினார்கள். பதட்டமாக இருந்தார்கள்.

கலைஞர் கொண்டுவந்த அரசாணை… நிறைவேற்றவில்லை!
அந்த நேரத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. அரசு அலுவலங்கள் மூடப்பட்டன. அத்தகைய அசாதாரணமான சூழல் நிலவியப்போது அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும், செவிலியர்களும்தான் வரபிரசாதமாக இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.
அப்போது அவருக்கு நிதி நெருக்கடியைவிட கொரோனா நெருக்கடிதான் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவர்கள்தான் உறுதுணையாக இருந்தார்கள். இந்த அரசு எப்படி மருத்துவர்களை மறக்கிறது. ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் எங்களுடையக் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. கலைஞர் காலத்தில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதனை அவரின் மகனும், பேரனுமே நிறைவேற்றவில்லை.
நாங்கள் ஒரு முறைப் போராட்டத்தை நடத்தி இருந்தோம். அந்தப் போராட்டத்தை வழிநடத்தி சென்ற லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அதிமுக ஆட்சியை ஒருபோதும் மருத்துவ சமுதாயம் மன்னிக்காது என்று ஸ்டாலின் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் இவரே இப்போது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
‘அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. போதிய ஊதியம் தரப்படுவதில்லை’ இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கோரிக்கை மனுவை வைத்தோம். அவர்களும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை.
எங்கள் கோரிக்கை நிறைவேறாதக் காரணத்தினால் எங்கள் கோரிக்கைகளுக்காக உயிரைவிட்ட மூத்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறை மேட்டூரில் இருக்கிறது. அதனால் மேட்டூர் டு சென்னை பாதயாத்திரையை ஜூன் 11 ஆம் தேதி தொடங்க இருக்கிறோம். மக்களுக்காக ‘பாதம் காப்போம்’ என்று திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசு மருத்துவர்களைப் பாதயாத்திரை மேற்கொள்ள செய்வது நியாயமா? கொரோனா சமயத்தில் இறந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை செய்ய வேண்டிய உதவியை இந்த அரசு செய்யவில்லை. தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையை வெளியிட வேண்டும்” என மருத்துவர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY