
சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.