
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது. சாலையை ஒட்டியே இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் இந்த பள்ளத்தில் ஒரு டிராக்டர் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் தற்போது கழிவு நீரும், மழை நீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாகவே இந்தப் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பொதுமக்கள், “ஓங்கப்பாடி கிராமத்தில் கல்வெர்ட் (culvert) அமைக்க சாலையின் ஓரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு கல்வெர்ட் அமைக்கும் பணி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் இந்தப் பள்ளம் அப்படியே விடப்பட்டது. நாளடைவில் இந்தப் பள்ளம் பெரிய அளவில் மாறியது. இந்தப் பகுதி கழிவு நீர் தேங்கும் பகுதியாகவும் மாறியது. கடந்த வாரத்தில் இரவு நேரத்தில் ஒரு டிராக்டர் இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்தச் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. எனவே இந்தப் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் அணைக்கட்டு வட்ட உதவி பொறியாளரிடம் கேட்டபோது, “ஓங்கப்பாடி கிராமத்தில் சாலையின் அருகில் ஏற்பட்ட பள்ளம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்தது. அந்தப் பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்தப் பகுதியின் சாலை ஆய்வாளரை (RI) தொடர்பு கொண்டு உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று கூறினார்.