
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு சமீபத்தில் புராஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 82 வயதான அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், பராக் ஒபாமா என பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தனர். இப்படி வயதான ஆண்களை பாதிக்கும் புராஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய் ஏற்பட்டால் குணப்படுத்த முடியுமா என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன்.
”புராஸ்டேட் என்பது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும், இனப்பெருக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துணை பால் சுரப்பி. இந்த புராஸ்டேட் சுரப்பிதான் விந்தணுக்களை உற்பத்தி செய்து அதற்கு உயிரூட்டமும் அளிக்கிறது. இந்த சுரப்பி அமைந்துள்ள இடத்தில் புற்றுநோய் மூலக்கூறுகள் வளர்ச்சி அடைவதைத்தான் புராஸ்டேட் புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய், தற்போது உலகளவில் ஆண்களை அதிகளவு பாதிக்கக்கூடிய புற்றுநோய் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் வயது. வயது அதிகமாக அதிகமாக அவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதற்கு நம்முடைய உணவுமுறை, பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது மரபியல் முறை. தாத்தாவிற்கோ, தந்தைக்கோ, புராஸ்டேட் புற்றுநோய் இருந்திருந்தால் மரபியல் காரணங்களால் அடுத்த தலைமுறைக்கும் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.
புராஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் அடைவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் தானாக வெளியேறுவது, சிறுநீர் தடைபடுவது, சிறுநீருடன் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுவது போன்றவை பொதுவான அறிகுறிகள். இதே அறிகுறிகள் பொதுவாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் ஏற்படும். ஆனால், அது புற்றுநோயால் ஏற்படும் அறிகுறிகள் இல்லை. வயது முதிர்வால் ஏற்படுவது. இந்த அறிகுறிகளை தவிர புற்றுநோய் பிரச்னை தீவிரமடையும்போது பாதிப்படைந்தவர்களுக்கு பசியின்மை, எடையிழப்பு போன்றவை ஏற்படலாம். இந்த புற்றுநோய் பல்வேறு உறுப்புகளுக்கும் பரவும்போது, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கலாம்.
அனைத்துவித புற்றுநோயும் ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். இந்த புராஸ்டேட் புற்றுநோயையும் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருக்கும்போது கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். மூன்று மற்றும் நான்காம் நிலையில் கண்டறிந்தால், புற்றுநோய் பரவலை பிற உறுப்புகளுக்கு பரவாமல், பாதிப்பு அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், குணப்படுத்த முடியாது.

புராஸ்டேட் புற்றுநோய் என்பது விந்தணு உற்பத்தியுடன் தொடர்பில் இருப்பதால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். விந்தணு வெளியேற்றத்தின்போது வலி, விந்துவுடன் ரத்தம் அல்லது சீழ் போன்ற திரவங்கள் கலந்து வெளியேறுவது, உடலுறவின்போதும் வலி ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அறுபது வயது கடந்த ஆண்களோ அல்லது ஐம்பதுகளின் இறுதியில் இருக்கும் ஆண்களோ, புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர். ஸ்ரீவத்சன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY