
ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடல்லாமல், கேப்டன்சியில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறார்.
கடந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை உட்பட உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகள் அனைத்தையும் வென்றார்.
நடப்பு ஐ.பி.எல் சீசனில் 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் அணியை பிளேஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இதன்மூலம், ஐபிஎல் சீசனில் 3 அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
ஆனால், இத்தகைய கேப்டனை, கடந்த சீசனில் கோப்பை வென்று கொடுத்த கையோடு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது கொல்கத்தா. இச்செயலை அப்போதே பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், கொல்கத்தா அணியில் ஸ்ரேயஸ் முதுகில் குத்தப்பட்டார் என்று வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், “இளம் வீரர்கள் தங்களுக்கு ரோல் மாடலைத் தேடுகிறீர்கள் என்றால் ஸ்ரேயஸ் ஐயரைத் தவிர வேறு யாரையும் பார்க்க வேண்டாம்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால், `இதில் பிரச்னை இல்லை. ஒரு வார்த்தை கூட நான் பேசமாட்டேன். சோகமாகவோ, வருத்தமாகவோ இருப்பதாக ஊடகங்களில் சொல்ல மாட்டேன்.’ என ஸ்ரேயஸ் ஐயர் கூறுகிறார்.
கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தார் அங்கு தக்கவைக்கப்படாமல் முதுகில் குத்தப்பட்டார்.

அதிலிருந்து அவர் வெளியே வந்து அமைதியாக தனது பேட்டால் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது அவரை பாருங்கள், இந்த மொத்த உலகமும் அவரை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறது.
பஞ்சாப் அணியை புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். இதுபோன்றுதான் ஒரு ஹீரோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்.