
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பான் – இந்தியா திரைப்படமான கண்ணப்பா, வெளியாவதற்கு ஒரு மாதமே உள்ள சூழலில் படத்தின் முக்கியமான காட்சிகள் இருந்த ஹார்டு டிஸ்க், தயாரிப்பு நிறுவனமான ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி பிரைவேட் லிமிடெட்’ஸின் ஹைத்ராபாத், ஃபிலிம் நகர் அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ரெட்டி விஜய் குமார், கடந்த மே 25ம் தேதி ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் படி, கடந்த மார்ச் 23ம் தேதி மும்பையில் உள்ள VFX நிறுவனமான ஹைவ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பிய ஹார்டு டிஸ்க் காணாமல் போயிருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் குறிப்பிடுகிறது.
குறிப்பிட்ட ஹார்டு டிஸ்க் DTDC கொரியர் சேவைகள் நிறுவனத்தின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன. அதனை தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு ஊழியர் பெற்று, மற்றொரு ஊழியரிடம் கொடுத்துள்ளார்.

இரண்டாவதாக ஹார்டுடிஸ்க்கை வாங்கிய நபர் தற்போது தலைமறைவாக இருக்கிறார் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஹார்டுடிஸ்க் படத்துக்கு மிக மிக அவசியமான காட்சிகள் உள்ளதாகவும், அவை வெளியில் கசிந்தாலோ, டெலிட் ஆனாலோ நிறுவனம் பெரும் பண இழப்பைச் சந்திக்க நேரிடும் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், எந்தவித ஒப்புதலும் இல்லாமல் நிறுவனத்துக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான திட்டத்துடன் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக ஹார்டுடிஸ்க்கை மீட்டுத் தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கண்ணப்பா படத்தில் மோகன் பாபு, சரத்குமார், மது எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ளது. அத்துடன், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் மற்றும் காஜல் அகர்வாலின் கேமியோவும் உள்ளது என்கின்றனர் படக்குழு