
மாநிலங்களவைத் தேர்தலில் மீனவ உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு அகில இந்திய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன்கோமஸ், தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “சுதந்திர இந்தியாவில், கடந்த 78 ஆண்டுகளில் மீனவச் சமூகம் பாராளுமன்ற பிரதிநிதித்துவமற்ற சமூகமாக, மத்திய அரசால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்க நாதியற்ற சமூகமாக, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
40 ஆண்டுகளாகத் தொடரும் இலங்கை கப்பற்படையின் படுகொலைகள், மத்திய பட்ஜெட்டில், மற்ற தொழில் பிரிவுகளுக்கு ஒதுக்குவது போல், மீனவர்களின், நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்களிப்பின் அடிப்படையில் நிதி ஒதுக்காதது,
மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் மீனவர்களைப் பழங்குடி பட்டியலில் இணைக்காதது, மீனவர் பயன்படுத்தும் எரி பொருளுக்கு (டீசல்) சம்பந்தமில்லாத சாலை வரி, பசுமை வரி விதிக்கப்படுவது, மீன்வளத்துறைக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் கார்ப்பரேட்களின் மீன் பண்ணைகளுக்கு நிதி ஒதுக்குவது,
மீனவர் வாழ்வாதார, வாழ்வுரிமைகளைப் பறிக்கும் வகையில் கடலில் தனியார் துறைமுகங்கள், கடலிலும் கரையிலும் கனிம சுரங்கங்கள், எரி வாயு, ஹைடிரோ கார்பன் வகைகளுக்காகக் கடலையும், கடற்கரையையும் கார்ப்பரேட்களுக்குக் குத்தகைக்கு விடுவது,
சாகர் மாலா உள்ளிட்ட வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய மீனவர்களைக் கடலிலிருந்தும், கரையிலிருந்தும் அப்புறப்படுத்தி, மீன்பிடி தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் சதித் திட்டம் எனும் சொல்லப்படாத துயரங்களால், இழைக்கப்படும் அநீதிகளைக் களையப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகிறது.
மீனவர்களும் இந்தியக் குடிமக்களும் தங்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தவிர்க்க முடியாததாகிறது.
நாட்டின் அனைத்து சமூகங்களின் தேவைகளை உணர்ந்து அரசுத் திட்டங்களை வகுக்கிறது. ஆனால் மீனவர்களின் தேவைகள் அரசுக்குப் புரிவதில்லை.
காரணம் ஆளும் அரசியல் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் நிலம் சார்ந்தவர்களாக உள்ளனர். இதனால் மீனவர் கோரிக்கைகளை, தேவையற்ற விஷயமாகக் கருதுகின்றனர்.
கடல் மற்றும் மீன்வளம் தொடர்பான சட்டங்களும், திட்டங்களும் மீனவர் பங்களிப்பின்றி, அறிவியல் பூர்வமற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களின் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன.

அறிவியல் பூர்வமற்ற முறையில் மீன்பிடி தடை காலம் கிழக்கு கடற்கரையில், மீன் இனப் பெருக்கக் காலமான வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் தவிர்த்து ஏப்ரல், மே என அறிவிக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படுவதோடு, அந்நியர் நம் மீன் வளத்தை, அனுமதியின்றி கொள்ளையிட வாய்ப்பளிக்கப்படுகிறது.
நிலமும் கடலும் சார்ந்த இந்திய அரசுக்கு, கடல் சார் மக்களின் துயரங்களை விளக்கி, உரிமைகளைப் பெற,முழுமையாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், சமூக நீதி முழக்கமிடும் திமுக, சார்பில் வரும் மாநிலங்களவைத் தேர்தலில் மீனவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.
தென் மாவட்ட மீனவர்கள் சிறுபான்மை கிறிஸ்தவராக இருந்தும், மீனவர் என்ற வகையிலோ, சிறுபான்மையோர் என்ற வகையிலோ எந்தவித வாய்ப்பும் வழங்கப்படாத வேதனை, காலங்காலமாகத் தொடர்கதையாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசால் மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்க, திமுக மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.

மதச்சார்பற்ற கூட்டணியின் ஒட்டு மொத்த ஆதரவாளர்களாக, கடந்த காலங்களில் தங்களுக்கு வாக்களித்த தென்மாவட்ட மீனவர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், மீனவர் மற்றும் சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதைத் தங்கள் கவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றோம்.
வரும் மாநிலங்களவைத் தேர்தலில், கற்றறிந்த, மீனவர் வாழ்நிலை அறிந்த, மீனவர் போராட்ட களம் கண்ட, வாத திறமை மிக்க, திமுக மீனவ உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளித்து, மீனவ சமூகத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் இருளகற்றி, விடியலுக்கு, வழிகாட்டுவீர்கள் என நம்புகிறோம்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY