‘பஹல்காம்’ என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன.
ஆம்… பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், இந்தப் பெயர் உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இன்று மீண்டும் அந்தப் பெயர் இந்தியாவில் அடிப்படுகிறது. காரணம், ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பஹல்காமில் சட்டமன்றக் கூட்டத்தை நேற்று நடத்தி முடித்துள்ளார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா நேற்று கூறுகையில், “ஜம்மு & காஷ்மீரின் அமைச்சரவைக் கூட்டம் காலை பஹல்காமில் நடைபெற்றது. ஜம்மு அல்லது ஶ்ரீநகரைத் தாண்டி வேறொரு பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
எங்களது அரசுக்கு என தெளிவான நிலைப்பாடு உள்ளது. ஆனால், வெறும் நிர்வாக மற்றும் அரசாங்கச் செயல்பாடுகளுக்காக மட்டும் நாங்கள் பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவில்லை.
ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சி, சந்தோஷம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற எங்களது நிலைப்பாடுகளை எந்தத் தாக்குதல்களும் நிறுத்தாது.
இந்தக் கூட்டத்தின் மூலம், நாங்கள் காஷ்மீர் மக்கள் முக்கியமாக பஹல்காம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஏப்ரல் 22-ம் தேதி சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் துணிவாக நின்றதற்கும், தாக்குதலுக்கும், வன்முறைக்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
அடுத்து எடுத்து வைக்கும் அடிகளை கவனமாக எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் காஷ்மீரில் சுற்றுலா தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 5 – 6 வாரங்கள், நாட்டிற்கு கடினமான காலம்.
ஜம்மு & காஷ்மீர் அதிக விலையைக் கொடுத்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர, என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். நமக்கு வேண்டிய உதவியை மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

நாம் பஹல்காமில் இருக்கிறோம். சுற்றுலா நமக்கு மிக முக்கியமானது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலா ஆபரேட்டர்கள் குழு தற்போது பஹல்காமி உள்ளனர். இவர்கள் ஶ்ரீநகருக்கும் வருவார்கள்.
இப்போது இந்தக் குழுவில் 20 – 25 பேர் இருக்கிறார்கள். அடுத்ததாக இருந்து கிட்டத்தட்ட 60 சுற்றுலா ஆபரேட்டர்கள் வந்து இங்கு சுற்றுலாத் துறையை மீண்டும் தொடர்வது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறார்கள். அவர்களுக்கு நன்றி” என்று பேசியுள்ளார்.