• May 28, 2025
  • NewsEditor
  • 0

‘அஷ்வின் மீது விமர்சனம்!’

நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடியிருந்தது. புள்ளிப்பட்டியலில் 10 வது இடம்பிடித்து லீக் சுற்றோடு தொடரை விட்டும் வெளியேறியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டிருந்த தமிழக வீரர் அஷ்வின் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அவர் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கோபத்துக்கும் உள்ளானார். இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு அஷ்வின் இப்போது பதில் கூறியுள்ளார்.

Ashwin – Dhoni

‘அஷ்வினின் பதில்…’

அஷ்வினின் யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர், ‘தயவு செய்து நீங்கள் எங்களின் அணியிலிருந்து வெளியேறி விடுங்கள்.’ என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் அஷ்வின், ‘உங்களின் கமெண்ட்டிலிருந்து நீங்கள் எந்தளவுக்கு சென்னை அணியை விரும்புகிறீர்கள் என தெரிகிறது.

உங்களுக்கு எந்தளவுக்கு இந்த அணியை பிடிக்குமோ அதைவிட 100% அதிகமாக எனக்குப் பிடிக்கும். இந்த சீசன் மோசமாக சென்றதிலும் எனக்கு அதிருப்திதான். பந்தை கொடுத்தால் பந்து போட வேண்டும். பேட்டை கொடுத்தால் பேட்டிங் ஆட வேண்டும். அணி எனக்கு கொடுத்த பணியை கடினமாக உழைத்து செய்திருக்கிறேன். சில இடங்களில் நான் இன்னும் மேம்பட வேண்டும்.

Ashwin
Ashwin

பவர்ப்ளேயில் அதிக ரன்களை கொடுத்தேன். அடுத்த சீசனில் அதை எப்படி சரி செய்ய வேண்டுமென்று யோசிப்பேன். ஒரு வீரராக அதைத்தான் என்னால் செய்ய முடியும். ஆனால், மீண்டும் இன்னொரு முறை சொல்கிறேன். உங்களுக்கு மட்டும்தான் இந்த அணியை பிடிக்கும் என நினைக்காதீர்கள்.

வீரர்கள் எதோ பொறுப்பற்று அலைவதை போல பேசாதீர்கள். 2008 லிருந்து இந்த அணியில் இருந்திருக்கிறேன். எல்லா கடினமான கட்டங்களையும் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஆடிய எல்லா சீசன்களிலும் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் சென்றிருக்கிறது. அதனால் அழுதுகொண்டு ஒரு மூலையில் அமர்ந்துவிடமாட்டேன்.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *