
பெங்களூருவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஜித்தேஷ் சர்மாவை லக்னோவின் திக்வேஷ் ரதி நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியிருந்தார். ஆனால், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இடையில் புகுந்து அந்த அவுட்டை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
‘திக்வேஷ் மீது விமர்சனம்!’
இந்நிலையில், நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் செய்ய முயன்ற திக்வேஷ் ரதியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அந்த விமர்சனங்களில் நியாயமில்லை என்பதே உண்மை.
‘விதிமுறைகள் சொல்வதென்ன?’
திக்வேஷ் ரதி இப்படி செய்யலாமா? இப்படி செய்துதான் ஒரு விக்கெட்டை எடுக்க வேண்டுமா? ஒரு போட்டியை வெல்ல வேண்டுமா? என நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையை எதோ ஏமாற்று வேலை போல விமர்சனம் செய்து வருகின்றனர். நியாயப்படி பார்த்தால் இந்த விமர்சனமெல்லாம் ஜித்தேஷ் சர்மா மீதுதான் எழுந்திருக்க வேண்டும்.

பௌலர் பந்தை ரிலீஸ் செய்யும் வரை நான் – ஸ்ட்ரைக்கர் க்ரீஸிலிருந்து வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் பௌலர் அவரை ரன் அவுட் செய்யலாம். இதுதான் விதிமுறை. விதிமுறையை மீறியது திக்வேஷ் அல்ல, ஜித்தேஷ்தான். ஆக, இங்கே விமர்சிப்பதென்றால் ஜித்தேஷைத்தான் விமர்சிக்க வேண்டும்.
முன்னாள் வீரர்களின் கருத்து!
‘கிரிக்கெட் ஜெண்டில் மேன் ஆட்டம் என்பதிலிருந்து நகர்ந்துவிட்டது. ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு வென்றுவிட வேண்டும் என்பதுதான் இப்போதைய மனநிலை. திக்வேஷ் ரதி செய்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர் விதிகளுக்கு உட்பட்டுதான் இதை செய்திருக்கிறார். ஆனால், ரிஷப் பண்ட் அதை அவுட் கொடுக்க வேண்டாம், நாங்கள் அப்பீல் செய்யவில்லை எனக் கூறியது பெருந்தன்மை.
ஆனால், அதே ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் வென்றால் ப்ளே ஆப்ஸ் செல்ல முடியும் என்ற சூழல் இருந்திருந்தால் அப்படி பெருந்தன்மையாக நடந்துகொண்டிருப்பாரா?’ என இந்த சம்பவம் பற்றி ராபின் உத்தப்பா பேசியிருந்தார்.

‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் ரிஷப் பண்ட் செய்தத்தைத்தான் செய்திருப்பேன். ஆனால், இங்கே பௌலரின் மீதும் எந்தத் தவறும் இல்லை. அவர் விதிகளுக்கு உட்பட்டுதான் இதையெல்லாம் செய்திருக்கிறார்.’ என மைக்கேல் க்ளார்க் பேசியிருக்கிறார்.
ஆம், பண்ட் செய்தது பெருந்தன்மைதான். ஆனால் அதற்காக திக்வேஷ் ரதி செய்தது எந்த விதத்திலும் தவறான செயல் இல்லை.