
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உணவுப்பழக்கம் உதவுமா… எப்படிப்பட்ட உணவுகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மங்கு எனப்படுகிற பிக்மென்ட்டேஷன் பிரச்னை இப்போது பலரையும் பரவலாக பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், கருந்திட்டுகளைப் போக்க, வைட்டமின் ஏ, சி, ஈ என மூன்று வைட்டமின்கள் மிக முக்கியம். இவற்றை நீங்கள் சப்ளிமென்ட் வடிவிலும் எடுக்கலாம். இவற்றில் வைட்டமின் ஏ சப்ளிமென்ட்டை நீண்டகாலத்துக்கு எடுக்கக்கூடாது. மருத்துவப் பரிந்துரை முக்கியம்.
உணவுகளின் மூலம் மங்கு பாதிப்பிலிருந்து மீளலாம். அதாவது கருந்திட்டுகளைப் போக்க உதவும் மேற்குறிப்பிட்ட வைட்டமின்களை உணவுகளின் மூலமும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ சத்துள்ள பப்பாளி, கேரட், பீட்ரூட், கீரை போன்றவற்றையும், வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, கொய்யா, கிவி, நெல்லிக்காய் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஈ சத்துக்காக பாதாம் சாப்பிடலாம். முதல்நாள் இரவு பத்து பாதாம் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிச் சாப்பிடலாம்.

சருமத்தின் கருந்திட்டுகளைப் போக்குவதில் மாதுளம்பழம் மிகச் சிறப்பாக வேலை செய்யும். ஜூஸாக குடிக்காமல் பழமாகச் சாப்பிடலாம். பீட்ரூட், வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் சாப்பிடலாம்.
ப்ளூ பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னைக்கு மிகச் சிறந்தவை. வெண்டைக்காய், கீரை, பீன்ஸ் என பச்சைக் காய்கறிகள் எல்லாமே இந்தப் பிரச்னைக்கு ஏற்றவைதான்.
பச்சை உருளைக்கிழங்கை சாறெடுத்து தினமும் 150 மில்லி அளவுக்கு, 15 நாள்களுக்குக் குடித்துவந்தால், நல்ல ரிசல்ட்டை பார்க்கலாம்.
புதினா இலைகளைப் போட்டு வைத்த தண்ணீர் அல்லது புதினா சேர்த்து அரைத்த மோர் குடிப்பதும் தீர்வாகும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு உதவும். கண்களைச் சுற்றி கறுப்பாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கலாம். அவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டீஸ்பூன் நெய் எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இளநீரும் மிகச் சிறந்தது.

முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, சருமத்தின் கருந்திட்டுகள் மாறுவதை உணர்வீர்கள்.
இந்த எல்லாமே உள்ளுக்குச் சாப்பிடுபவை. இவற்றில் எதையும் சருமத்தில் தடவ முயல வேண்டாம். எந்தப் பொருள், யாருக்கு, எப்படிப்பட்ட அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. எனவே, சருமத்துக்கு வெளிப்பூச்சு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே எதையும் பின்பற்றவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.