
‘பெங்களூரு வெற்றி!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. சேஸிங்கில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா 85 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வென்றுவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
‘தினேஷ் கார்த்திக்தான் குரு!’
ஜித்தேஷ் சர்மா பேசியதாவது, ”என்னுடைய உணர்வுகளை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியவில்லை. சேஸிங்கின் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்தத் தருணத்தில் நிலையாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்தேன். விராட் கோலி அவுட் ஆன போது நின்று ஆடி போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெல்ல வைக்க வேண்டும் என்றே நினைத்தேன்.
என்னுடைய குருவும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக்கும் நான் அப்படித்தான் ஆட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். எந்த சூழலிலிருந்தும் என்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொடுத்திருந்தார். ஹேசல்வுட் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். எங்கள் அணி முழுமையாக தன்னம்பிக்கையோடு இருக்கிறது.

எங்கள் அணியில் எல்லாருமே மேட்ச் வின்னர்கள்தான். சில விக்கெட்டுகளை விட்டாலும் எங்களால் நம்பிக்கையோடு ஆடி வெல்ல முடியும். ஆர்சிபி மிகப்பெரிய அணி. இந்த அணியில் விராட் கோலி, புவனேஷ்வர் குமார், க்ருணால் போன்ற வீரர்களுடன் ஒன்றாக ஆடுவது எனக்கு எப்போதுமே சந்தோஷத்தையும் ஆர்வத்தையுமே கொடுக்கிறது.

நடப்பு சீசனில் வெளியூரில் ஆடிய எல்லா போட்டிகளையும் வென்றிருக்கிறோம் என பாராட்டுகிறீர்கள். அதற்கான க்ரெடிட்டை ரஜத் பட்டிதருக்குதான் கொடுக்க வேண்டும். இந்தப் போட்டியில் எங்களுக்கு கிடைத்த மொமண்டமை அப்படியே அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.’ என்றார்.