
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.118.33 கோடி மதிப்பில் கொளத்தூர், பழனி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், குளம், பூங்கா மற்றும் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கொளத்தூரில், தேவி பாலியம்மன், இளங்காளியம்மன் கோயில் சார்பில் ரூ.8.88 கோடியில், 27.525 சதுரடி பரப்பில், 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் உறைவிடம் கட்டப்படுகிறது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் ரூ.8.48 கோடியில், 38,750 சதுரடியில், 100 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலும் திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில் சார்பில் ரூ.5.25 கோடி மதிப்பில், பாளையங்கோட்டையில் 15,473 சதுரடி பரப்பில் 50 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையிலும் உறைவிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த 3 உறைவிடங்கள் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.