
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன.
கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.