
‘பெங்களூரு வெற்றி!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் திக்வேஷ் ரதி செய்த நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் என்ன நடந்தது?
‘திக்வேஷின் நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட்!’
போட்டி முக்கியமான பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. 17 வது ஓவரை திக்வேஷ் ரதி வீசியிருந்தார். பெங்களூரு சார்பில் ஜித்தேஷ் சர்மாவும் மயங்க் அகர்வாலும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். இந்த ஓவரிலுமே ஒரு ப்ரீ ஹிட்டில் ஜித்தேஷ் சிக்சர் அடித்திருப்பார். ஜித்தேஷ்தான் எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக ஆடி சேஸிங்கை முன்னெடுத்து சென்றுகொண்டிருந்தார்.
திக்வேஷ் ரதி வீசிய இந்த ஓவரின் கடைசிப் பந்தில் மயங்க் அகர்வால் ஸ்ட்ரைக்கில் இருந்தார். திக்வேஷ் ஓடி வந்து பந்தை வீசுவதற்குள் நான் ஸ்ட்ரைக்கராக இருந்த ஜித்தேஷ் க்ரீஸை விட்டு வெளியே வந்துவிடுவார். இதை கவனித்த திக்வேஷ் பெய்ல்ஸை தட்டி விட்டு ரன் அவுட்டுக்கு அப்பீல் செய்வார். கள நடுவரும் மூன்றாவது நடுவரிடம் அது அவுட்டா நாட் அவுட்டா என கேட்க ஆரம்பித்து விடுவார்.

ரீப்ளையில் அது அவுட் என்றே தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுப்பார். எல்லாருக்கும் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறை விதிகளுக்கு உட்பட்டதுதான். அப்படியிருக்க ஏன் நாட் அவுட் என்கிற குழப்பம் இருக்கும். இங்கேதான் ரிஷப் பண்ட் கொஞ்சம் பெரிய மனது காட்டினார். அதாவது கள நடுவரிடம் சென்று நாங்கள் அப்பீல் செய்யவில்லை, அவுட் கொடுக்காதீர்கள் எனக் கூறிவிடுவார்.
அதனால்தான் நாட் அவுட் கொடுக்கப்படும். ரிஷப் பண்ட்டின் இந்த செயலுக்கு ஜித்தேஷ் அவரை கட்டுத்தழுவி நன்றி கூறியிருந்தார்.

நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறை விதிகளுக்கு உட்பட்டதுதான் என்பதால் திக்வேஷ் செய்ததிலும் எந்தத் தவறும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.