
‘பெங்களூரு வெற்றி!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் எட்டி வென்றிருக்கிறார்கள். குறிப்பாக, பல டிராமாக்களை கடந்து கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி ஆடிய விதம்தான் அவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.
‘கடந்தப் போட்டியின் தோல்வி!’
பெங்களூரு அணி கடந்த போட்டியையும் இதே மைதானத்தில்தான் ஏக்னா மைதானத்தில்தான் ஆடியிருந்தனர். அதில் டார்கெட் 232. ஓப்பனிங்கிலும் மிடிலும் நன்றாகத்தான் ஆடியிருப்பார்கள். ஆனால், டெத் ஓவர்களில் கடுமையாக சொதப்பியிருப்பார்கள். அந்த கடைசி 5 ஓவர்கள்தான் அவர்களிடமிருந்து வெற்றியைப் பறித்தது.
இந்தப் போட்டியிலும் கிட்டத்தட்ட அதே டார்கெட்தான். இங்கேயும் பெங்களூரு அணிக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. சால்ட்டும் கோலியும் அதிரடியாக ஆடி ஆரம்பத்திலிருந்தே நல்ல ரன்ரேட்டில் சேஸை முன்னெடுத்து சென்றனர். முதல் 10 ஓவர்களில் பெங்களூரு அணி 115 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 12 வது ஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் அரைசதத்தைக் கடந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

‘அசத்திய ஜித்தேஷ்!’
இங்கேதான் கடந்த போட்டியை போல டெத்தில் சொதப்பி விடுவார்களோ எனத் தோன்றியது. ஆனால், ஜித்தேஷ் சர்மா உள்ளே Captain’s Knock ஆடினார். கோலி அவுட் ஆன அடுத்த 2 வது ஓவரிலிருந்தே அதிரடியை ஆரம்பித்து விட்டார். பீல்டர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் லாவகமாக ஷாட்களை ஆடினார். வில்லியம் ஓ ரூர்க் வீசிய 14 வது ஓவரில் 17 ரன்களை எடுக்க காரணமாக இருந்தார்.
சபாஷ் அஹமதுவின் அடுத்த ஓவரில் 21 ரன்களை எடுக்க காரணமாக இருந்தார். இன்னொரு முனையில் நின்ற மயங்க் அகர்வால் ஜித்தேஷூக்கு நன்றாக ஒத்துழைத்து ஆடினார். பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை ஜித்தேஷூக்கு ரொட்டேட் செய்து கொடுத்தார். அந்த 2 பெரிய ஓவர்கள் மூலம் போட்டி கொஞ்சம் ஆர்சிபி பக்கம் வந்தது. கடைசி 5 ஓவர்களில் 50 ரன்களை சுற்றிதான் ஆர்சிபி எடுக்க வேண்டியிருந்தது. இங்கேதான் சில ட்விஸ்ட்கள் அரங்கேறின.

‘ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!’
ரிஷப் பண்ட் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்றே போட்டியை தாமதப்படுத்துவார் இல்லையா? அதையே இங்கேயும் மீண்டும் செய்தார். 21 ரன்கள் சென்ற 15 வது ஓவருக்குப் பிறகு 16 வது ஓவருக்கு முன்பாக கையுறைகளையெல்லாம் கழட்டி மாட்டி சப்போர்ட் ஸ்டாப்களை உள்ளே அழைத்து வேண்டுமென்றே சில நிமிடங்களை வீணடித்தார்.
இதன்பிறகு ஆவேஷ் கான் வீசிய 16 வது ஓவரிலும் ஜித்தேஷ் 2 பவுண்டரிக்களை அடித்தார். திக்வேஷ் ரதி வீசிய அடுத்த ஓவரில்தான் இன்னும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக அரங்கேறியது.

‘திக்வேஷின் திரில் ஓவர்!’
திக்வேஷ் வீசிய முதல் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பேக்வர்ட் பாய்ண்ட்டில் ஆயுஷ் பதோனியிடம் ஜித்தேஷ் கேட்ச் ஆனார். ஆயுஷ் பதோனி அந்த கேட்ச்சை சரியாக பிடித்தாரா என்பதை தேர்டு அம்பயர் ரீப்ளையில் பார்த்துக்கொண்டார். அதில் திக்வேஷ் Back Foot நோ – பால் வீசியது தெரிய வந்தது. நோ – பால் கொடுக்கப்பட்டு ப்ரீ ஹிட்டும் வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டில் ஜித்தேஷ் சிக்சர் அடித்தார்.
அதே ஓவரில் ஜித்தேஷை நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் திக்வேஷ் வீழ்த்தினார். தேர்டு அம்பயர் அது அவுட்டா இல்லையா என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் உள்ளே புகுந்து நாங்கள் அப்பீல் செய்யவில்லை எனக்கூற, அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். திக்வேஷ் ரதியின் ஒரே ஓவரில் அத்தனை அக்கப்போர்கள். அந்த ஓவருக்கு பிறகு ஜித்தேஷூக்கு எந்தத் தடையும் இல்லை.

மீண்டும் சிக்சர்களை பறக்கவிட்டு 18.4 வது ஓவரிலேயே ஜித்தேஷ் சர்மா போட்டியை முடித்தார். ஜித்தேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார். கேப்டனாக பௌலிங்கின்போது ஜித்தேஷ் நிறைய தவறுகளை செய்திருந்தார். அதையெல்லாம் சரிகட்டும் அளவுக்கு பேட்டிங்கில் கலக்கிவிட்டார்.

ஐ.பி.எல்-லில் பெங்களூரு அணியின் அதிகபட்ச ரன் சேஸ் இதுதான். இந்த சேஸின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் முடித்திருக்கிறது. 2016 க்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து குவாலிபையர் 1 இல் ஆர்சிபி ஆடவிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்சிபி சிறப்பாக ஆடி வருகிறது. அதிசயம் நடக்கிறதா.. .ஈ சாலா கப் நமதே சாத்தியமாகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.